/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புறவழிச்சாலை திட்டம்: அதிகாரிகள் குழப்பம்
/
புறவழிச்சாலை திட்டம்: அதிகாரிகள் குழப்பம்
ADDED : ஆக 16, 2025 09:48 PM
பல்லடம்; பல்லடத்தில், புதிய புறவழிச்சாலை திட்டத்தை போன்றே பழைய புறவழிச் சாலை திட்டத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, அதிகாரிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புறவழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
கோவை- - திருச்சி ரோடு, பெரும்பாளி அருகே துவங்கி, மங்கலம் ரோடு, திருப்பூர் ரோடு வழியாக மாதப்பூர் வரை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அளவீடு பணிகள் துவங்கிய நிலையில், தொழிற்சாலைகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறி, பொதுமக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிய புறவழிச்சாலை திட்டம் வேண்டாம் என்றும், பழைய புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய புறவழிச் சாலை திட்டத்திற்கு ஒருதரப்பு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாய நிலங்கள், பி.ஏ.பி., வாய்கால்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதால், பழைய புறவழிச்சாலை திட்டம் வேண்டாம் என்று மற்றொரு தரப்பினர், சமீபத்தில், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இவ்வாறு, இரு திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளதால் அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதுதான், பல்லடம் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளில் முக்கியமானதாக உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எந்த ஒரு திட்டங்களும் பல்லடத்தில் செயல்படுத்தப்படவில்லை.
நீண்ட காலத்துக்குப் பின், புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வந்துள்ளது. இதன்படி, புறவழிச்சாலை அமையுமானால், நகரின் வளர்ச்சி மட்டுமன்றி தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும். எனவே, ஏதாவது ஒரு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
குறைந்த பாதிப்புகள் கொண்ட திட்டம் எது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து, அதற்குஏற்ப தகுதியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு.