/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் பொருள் வாங்க பிரதிநிதி நியமனம் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அழைப்பு
/
ரேஷன் பொருள் வாங்க பிரதிநிதி நியமனம் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அழைப்பு
ரேஷன் பொருள் வாங்க பிரதிநிதி நியமனம் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அழைப்பு
ரேஷன் பொருள் வாங்க பிரதிநிதி நியமனம் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 18, 2025 12:11 AM
திருப்பூர் : ஒரு நபர் ரேஷன் கார்டு தாரர்கள், மிக சுலபமாக 'ஆன்லைனில்' விண்ணப்பித்து, பிரதிநிதி நியமிப்பதற்கான அங்கீகார சான்று பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு நபர் ரேஷன் கார்டு தாரர், வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பிரதிநிதிகளை நியமித்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் நடைமுறை உள்ளது.
இதற்காக, அந்தந்த வட்ட வழங்கல் தாசில்தாரிடம் நேரடியாக விண்ணப்பித்து, அங்கீகார சான்று பெறவேண்டும். பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர், ஒருநபர் கார்டு தாரருக்கான ஒதுக்கீடு பொருட்களை வாங்குவதற்கு, ஒவ்வொருமுறையும் ரேஷன் கடைக்கு அங்கீகார சான்றை கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது.
நேரடியாக விண்ணப்பிக்கவேண்டியிருந்ததால், அங்கீகார சான்று பெற ஒருநபர் கார்டுதாரரின் பிரதிநிதி, வீண் அலைச்சலை சந்திக்க நேரிட்டது.
இதற்கு மாற்றாக, ஒருநபர் ரேஷன் கார்டுதாரர், பிரதிநிதி நியமிப்பதற்கான அங்கீகார சான்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.
ஒருநபர் கார்டுதாரர்கள், https://tnpds.gov.in/ இணையதளத்தின் மூலம், மிக சுலபமாக அங்கீகார சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
பிரதிநிதியாக நியமிக்கப்படுபவரின் பெயர், பிறந்த தேதி, ஒருநபர் கார்டு தாரருக்கும் பிரதிநிதிக்கும் இடையிலான உறவு முறை, ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பிக்கவேண்டும்.
திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,135 ரேஷன் கடைகளில், மொத்தம் 8.18 லட்சம் கார்டுதாரர் உள்ளனர். ஒருநபர் கார்டுதாரர்களில், 7 ஆயிரம் பேர் வரை, அங்கீகார சான்று பெற்று, உறவினர், நண்பர்கள் உள்பட பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருள் பெற்றுவருகின்றனர். ஒருநபர் கார்டுதாரர்கள், பிரதிநிதி நியமிக்க நேரடியாக விண்ணப்பித்து காத்திருக்கவேண்டிய அவசியமில்லை.
சுயமாகவோ, இ-சேவை மையம், கம்ப்யூட்டர் மையங்கள் மூலம், மிக சுலபமாக 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். அவ்விண்ணப்பங்கள் வழங்கல் தாசில்தாரால் சரிபார்க்கப்பட்டு, அங்கீகார சான்று வழங்கப்படும்.
நியமிக்கப்படும் பிரதிநிதியின் பெயர், ஒருநபர் கார்டுதாரரின் பெயரோடு சேர்க்கப்பட்டுவிடும். அதனால், ஒவ்வொருமுறையும் பொருட்கள் வாங்க, அங்கீகார சான்று எடுத்து வரத்தேவையில்லை.
ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப்சேல் மெஷினில் ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்யும்போது, பிரதிநிதியின் பெயர் வந்துவிடும்.
அந்நபர் தனது பயோமெட்ரிக்கை பதிவு செய்து, ஒருநபர் கார்டுதாரருக்கான ஒதுக்கீடு பொருட்களை வாங்கி கொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் இயலாத நிலையில் உள்ள ஒருநபர் கார்டுதாரர்கள், பிரதிநிதி நியமிக்க, 'ஆன்லைனில்' விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.