/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேச்சுவார்த்தைக்கு அழைத்து அலைக்கழிப்பு; விவசாயிகள் - பொதுமக்கள் போராட்டம்
/
பேச்சுவார்த்தைக்கு அழைத்து அலைக்கழிப்பு; விவசாயிகள் - பொதுமக்கள் போராட்டம்
பேச்சுவார்த்தைக்கு அழைத்து அலைக்கழிப்பு; விவசாயிகள் - பொதுமக்கள் போராட்டம்
பேச்சுவார்த்தைக்கு அழைத்து அலைக்கழிப்பு; விவசாயிகள் - பொதுமக்கள் போராட்டம்
ADDED : செப் 17, 2025 11:57 PM

திருப்பூர்; மாநகராட்சி குப்பை பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, அலைக்கழிப்பதாக கூறி, விவசாய அமைப்பினரும், பொதுமக்களும் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்; இதையடுத்து, 50 பேரை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்கவைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, முதலிபாளையம் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசு மற்றும் அருகாமை விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, விவசாய அமைப்புகளும், முதலிபாளையம் சுற்றுப்பகுதி பொதுமக்களும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாறைக்குழியில் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, விவசாய அமைப்பினருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில சட்ட விழிப்புணர்வு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர்பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி உள்பட விவசாயிகள், பொதுமக்கள், நேற்று மாலை, 3:30 மணியளவில் பேச்சுவார்த்தைக்காக, கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெறும் எனவும்; ஐந்து பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி, கலெக்டர் அலுவலக போர்டிகோவில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, பொதுமக்களை போலீசார் கைது செய்து, பெரிச்சிபாளையத்திலுள்ள தனியார் மண்ட பத்தில் தங்கவைத்தனர்.