ADDED : பிப் 08, 2025 06:25 AM
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: தமிழக சுகாதாரத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில், வரும் 10ம் தேதி குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. ஒன்று முதல் 19 வயது வரையிலான, 5.6 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான, 2.5 லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள், வரும், 10ம் தேதியும் விடுபட்டோருக்கு, 17ம் தேதியும் வழங்கப்பட உள்ளது.
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்தசோகை, வாந்தி ஏற்படுகிறது. குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வது அவசியம். காலை அல்லது மதியம் உணவு உட்கொண்டபின், அரைமணிநேரம் கழித்து, மாத்திரை உட்கொள்ளவேண்டும். பக்கவிளைவுகள் கிடையாது. மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.