ADDED : செப் 25, 2024 12:20 AM
பல்லடம் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, துணிப்பை ஆர்டர் கிடைக்குமா? என, விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, திருப்பூர் மற்றும் கோவைமாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
பொங்கல் இலவச வேட்டி சேலை ஆர்டர் விசைத்தறிகளுக்கு வழங்கியதன் மூலம், ஈரோடு, திருச்செங்கோடு பகுதி விசைத்தறியாளர்கள் பயன்பெறுவர்.
திருப்பூர் கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளில் ஆள் பற்றாக்குறை மற்றும் அகலமான தறிகள் என்பதால், இலவச வேட்டி சேலை திட்டம் இங்கு பயனளிக்காது.
இதற்கு மாற்றாக, ரேஷனில், பொங்கல் பொருட்களை துணிப்பைகளில் வழங்குவதன் மூலம், திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறிகள் பயன்பெறும்.
தமிழகத்தில், 2 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கிறது. இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கான பொங்கல் பொருட்களை தமிழக அரசு, துணி பைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்கினால், 70 லட்சம் மீட்டர் காடா துணிகள் இதற்கு தேவைப்படும்.
மேலும் இதனால், விசைத்தறியாளர்கள் உட்பட, பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவார்கள். நெகிழி பைகளுக்கு மாற்றாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இது அமையும் என்பதால், பொங்கல் பொருட்களை துணிப்பைகளில் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்து, இதற்கான ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.