/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவசர கால 'ஷட்டர்' அடைக்கப்படலாமா?
/
அவசர கால 'ஷட்டர்' அடைக்கப்படலாமா?
ADDED : ஆக 10, 2025 02:54 AM

ஆ ண்டிபாளையத்திலிருந்து, உகாயனுார் வரை செல்லும் பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில், முக்கியமான இடங்களில் அவசர கால ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கலுாரில், நல்லகாளிபாளையம் கிராமத்தில், அவசர கால பயன்பாட்டுக்காக பி.ஏ.பி., வாய்க்காலில் ஷட்டர் அமைக்கப்பட்டு இருந்தது.
மழைக்காலங்களில் வாய்க்காலில் அதிக தண்ணீர் பெருக்கெடுத்து, உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழலில், ஷட்டரை திறந்துவிடும்போது, தண்ணீர், அருகே செல்லும் திருவணி முத்தாறு என்கிற ஓடை வழியாக சென்று, நொய்யலாற்றில் சேர்ந்து விடும். இதனால், கிராம பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும்.
பி.ஏ.பி., அதிகாரிகள் தற்போது, நல்லகாளி பாளையத்திலிருந்த அவசர கால ஷட்டரை, கான்கிரீட் சுவர் எழுப்பி, முழுமையாக அடைத்துவிட்டனர்.
விவசாயி திருநாவுக்கரசு கூறியதாவது: எவ்வித முன்னறிவிப்புமின்றி, பி.ஏ.பி., வாய்க்காலில், நல்லகாளி பாளையத்தில் அமைக்கப் பட்டிருந்த ஷட்டரை திடீரென சுவர் எழுப்பி அடைத்துவிட்டனர்.
வாய்க்காலில் வெள்ளம் அதிகரித்து உடைப்பு ஏற்படும் பட்சத்தில், தண்ணீர் செல்ல வழியின்றி, அருகாமை குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயநிலை உருவாகியுள்ளது.
வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டால், ஐந்து கிராமங்கள் தண்ணீரால் பாதிப்புக்குள்ளாகும்.
குறிப்பாக, நல்லகாளிபாளையம் கடுமையாக பாதிக்கப்படும். இதுகுறித்து பொங்கலுார் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தோம்.
அவர்களோ, உயர் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர். பொள்ளாச்சி சென்று நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து, ஷட்டரை மீண்டும் அமைக்க கோரி மனு அளிக்க உள்ளோம். மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மாவட்ட நிர்வாகம், பி.ஏ.பி., வாய்க்காலில் மீண்டும் ஷட்டரை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஷட்டரை திறந்துவிடும்போது, தண்ணீர், அருகே செல்லும் திருவணி முத்தாறு என்கிற ஓடை வழியாக, நொய்யலாற்றில் சேர்ந்துவிடும். இதனால், கிராம பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும்.