/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கான கட்டணத்தை குறைக்கலாமே!
/
ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கான கட்டணத்தை குறைக்கலாமே!
ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கான கட்டணத்தை குறைக்கலாமே!
ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கான கட்டணத்தை குறைக்கலாமே!
ADDED : ஜன 20, 2025 11:36 PM
திருப்பூர் : திருப்பூர் - மங்கலம் ரோட்டிலுள்ள ஆண்டிபாளையம் குளத்தில், சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம், கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பாட்டை துவக்கியுள்ளது. குளத்தில் சவாரி செய்வதற்காக, மோட்டார் படகு 2, துடுப்பு படகு 3, பெடல் படகு 8 என, மொத்தம் 13 படகுகள் உள்ளன.
மோட்டார் படகில், 20 நிமிட பயணத்துக்கு ஒரு நபருக்கு 100 ரூபாய்; 4 இருக்கை பெடல் படகு மற்றும், 5 இருக்கை துடுப்பு படகுகளில், 20 நிமிட பயணத்துக்கு, ஒரு நபருக்கு 100 ரூபாய்; இரண்டு இருக்கை பெடல் படகில், 30 நிமிட சவாரிக்கு, 150 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு வசூலிக்கப்பட்டுவரும் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், கட்டணத்தை குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் அளித்த மனு:
மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, ஒட்டணையிலிருந்து வரும் தண்ணீரால், ஆண்டிபாளையம் குளம் ஆண்டு முழுவதும் நீர் நிறைந்து காணப்படுகிறது. குளத்தின் நடுவே அடர்ந்த மரங்களுடன் கூடிய திடலுக்கு பறவைகள் ஏராளம் வந்துசெல்கின்றன.
சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. போதிய பொழுது போக்கு அம்சங்கள் இல்லாதநிலையில், படகு இல்லம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதேநேரம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்களைவிட, ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது.
பனியன் நகரான திருப்பூரில், ஏழை, நடுத்தர குடும்பத்தினரே அதிகம் வசிக்கின்றனர். தற்போதைய கட்டணத்தில் அனைத்து தரப்பு மக்களாலும், படகு சவாரி மேற்கொள்ளமுடியாது. எனவே, ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கான கட்டணத்தை உடனடியாக குறைக்கவேண்டும். தற்போது, 8 இருக்கை படகு பயணத்துக்கு, 800 ரூபாய்; 2 இருக்கை மிதி படகுக்கு, 300 ரூபாய் என்கிற அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை குறைக்கவேண்டும். இதனால், அதிக எண்ணிக்கையில் மக்கள் படகு இல்லத்தை பயன்படுத்துவர்; அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதேபோல், பார்க்கில் வசதியை முறைப்படுத்தி, படகு இல்ல பகுதியில் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசல்களுக்கும் தீர்வுகாணவேண்டும். இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.