/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெல்ல முடியாததல்ல புற்று நோய்! ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்
/
வெல்ல முடியாததல்ல புற்று நோய்! ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்
வெல்ல முடியாததல்ல புற்று நோய்! ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்
வெல்ல முடியாததல்ல புற்று நோய்! ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்
ADDED : நவ 07, 2025 12:15 AM

திருப்பூர்: புற்றுநோய் சிகிச்சையில் பல முன்னேற்றங் களுக்கு வழிவகுத்த அறிவியல் அறிஞர் மேரி கியூரி அவர்களின் பிறந்த தினமான இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு முதல் நவ.7ம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புற்றுநோய் பற்றிய புரிதல், ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வுக்கான நாளாக இது அமைகிறது.
நம் உடலில் உள்ள அணுக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வளர்ந்து, பிரிந்து இறப்பது இயல்பு. இந்நிலை மாறி அணுக்கள் அசாதாரண வளர்ச்சி பெற்று, பிற இடங்களுக்கு பரவுதல் புற்றுநோயாகிறது. இது கட்டி போன்ற அமைப்புகளாக உருவாகும். வாய், மார்பு, நுரையீரல், உணவுக்குழாய், குடல், ரத்தம் உட்பட பல இடங்களில் வரக்கூடியது. தொற்றுநோய் போல ஒருவரிடமிருந்து மற்றொரு வருக்கு இது பரவாது.
புற்றுநோயும், அதற்கான சிகிச்சை குறித்தும், புற்றுநோய் நிபுணர் டாக்டர் மருத்துவர் சுரேஷ் குமார் கூறியதாவது:
புற்றுநோய் இன்று அரிதான நோயல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும், 14.1 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள் அறியப்படுகின்றனர். தமிழகத்திலும் இதே நிலை தான். தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத்திட்டத்தின் தகவல்படி 2012ல், 53 ஆயிரமாக இருந்த புதிய புற்றுநோய் எண்ணிக்கை, 2022ல் 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இன்றளவில் ஒரு லட்சம் என்றாகி இருக்கும்.
காரணம் என்ன?
புற்றுநோய் வருவதற்கு முக்கியக்காரணிகளுள் ஒன்று, சுற்றுச்சூழல். புகை, துாசு, என்று மாசுபட்டிருப்பது நோய்க்கு வழிவகுக்கிறது. வாய், தொண்டை, நுரையீரல் புற்றுநோய்க்கு புகையும், மார்பகப்புற்றுநோய்க்கு ஹார்மோன்களும் காரணமாகிறது. மேலும் உணவுமுறை, மரபணு போன்றவையும் ஒரு சில காரணிகளே.
இப்படித்தான் வரும்
நாம் செருப்பில்லாமல் பாதயாத்திரை போகிறோம் என்று எடுத்துக்கொள்வோம்.
நமக்கு பாதம் அங்குள்ள திசுக்களின் வளர்ச்சியால் மிருதுவாகும். அது இயற்கைதான், அந்த அழுத்தத்திற்கு நம் உடல் நமக்கென்று தற்காத்துக்கொள்ள செய்யும் வழிவகைதான் அது.
அது போல புகையிலை பயன்படுத்துவோர்க்கு வாயில் புகையிலை கொடுக்கும் அழுத்தத்தால் அங்குள்ள தசை மிருதுவாகும்.
இது போன்ற நம் உடலில் பாதுகாப்புக்காக இயற்கையாக இருக்கும் அம்சங்களே ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது, மிருதுவாகும் தசைகள் தாறுமாறாக வளர ஆரம்பிக்கும், அதுவே புற்றுநோயாக மாறுகிறது.
இதுபோலத்தான் புகை படிவதால் நுரையீரல், வயிற்றில் உள்ள அமிலம் அதிகரித்து அழுத்தம் கொடுப்பதால் உணவுக்குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய் வரும். தமிழகத்தில் அதிகப்படியாக, பெண்களுக்கு மார்பிலும், ஆண்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் பகுதியிலும் புற்நோய் வருகிறது.
நம் உறுப்புகள் நம்மை காத்துக்கொள்ள போராடும். அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.
அந்த எல்லை மீறும்போது அணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் புற்று நோய் வருகிறது.
தினமும், 20 சிகரெட் பிடிப்பவர்க்கு வராத புற்றுநோய், 2 சிகரெட் பிடிப்பவர்க்கு வரலாம். இது ஒரு பொது காரணியாக கூறலாம்.
அறிகுறிகள்
திடீர் உடல் எடை குறைவு, மிகுந்த இருமல், குரல் மாற்றம், சிறுநீர், மலம் கழிக்கும்போது சிக்கல் அல்லது ரத்தம் வருதல் போன்றவை பொது அறிகுறிகள். மேலும் ஒவ்வொரு பகுதியில் வரும் நோய்க்கு அறிகுறிகள் மாறுபடும்.
மார்பு, கழுத்து பகுதியில் கட்டிகள் வரலாம். உதடு, நாக்கு பகுதியில் நீண்ட நாள் ஆறாத புண்கள், மிருதுவான தசை இருக்கலாம். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்வது அவசியம்.
ஆரோக்கியமாக இருந்தாலும் சிறிய பரிசோதனை செய்வது நல்லது. பெண்களில் 8 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அபாயம் இருக்கிறது.
சிகிச்சை முறைகள்
புற்றுநோய்க்கு புதுப்புது சிகிச்சை முறைகள் வந்துகொண்டே உள்ளன. அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து முறை ஆகிய மூன்றும் அதிகப்படியாக பின்பற்றப்படுகிறது. முன்பு, அறுவை சிகிச்சையில், பாதித்த இடத்தையே முழுவதுமாக அகற்றி விடுவர்.
அதற்கு பதிலாக இப்போது, கட்டியை மட்டும் எடுக்கும்படி மருத்துவம் வளர்ந்துவிட்டது. மருத்துவத்துறையில் மிகவும் விலையுயர்ந்த இயந்திரங்கள் புற்றுநோய்க்கானவை தான். 350 கோடி ரூபாய் வரையில் இயந்திரங்கள் உள்ளன.
தடுக்கும் வழிகள்
நமக்கு நன்கு தெரிந்த காரணியாக இருக்கும் புகையிலையை விட தயங்குகிறோம். புற்றுநோய் வரும் என்று தெரிந்தும் பயன்படுத்துவோர் இருக்கின்றனர். வாய், தொண்டை, நுரையீரல் புற்றுநோய்க்கு புகையிலை, சிகரெட் பயன்படுத்தல் கூடாது. கர்ப்பப்பை புற்றுநோய்க்கு எச்.பி.வி. தடுப்பூசி போட வேண்டும். கல்லீரல் புற்றுநோய்க்கு ஹெபடிடிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். மது கட்டுப்பாடு, மாசு குறைப்பு போன்றன நாம் செய்ய வேண்டும்.
உணவு
சரிவிகித உணவு, உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஆன்டியாக்சிடன்ட்கள் அதிகரித்து புற்றுநோயாக மாறக்கூடிய அணுக்களை அது தடுக்கும் வாய்ப்புகள் அதிகம். உணவில் அதிக கவனம் தேவை.
செயற்கை உரத்தில் வளரும் அனைத்து உணவுகளும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். கருஞ்சீரகம், மஞ்சள் போன்ற ஆன்டியாக்சிடன்ட் நிறைந்த உணவுகள் புற்றுநோய் பாதிப்பை குறைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
வெல்ல முடியும்
புற்றுநோய் இன்று நம் நாட்டில் பெரிய சவாலாக மாறி வருகிறது. ஆனால், இது வெல்ல முடியாத ஒன்றல்ல. முன்னெச்சரிக்கையாலும் முறையான சிகிச்சையாலும் தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும். இந்த விழிப்புணர்வு நாளில் புற்றுநோய்க்கு எதிராக வழிமுறைகளை கடைபிடித்து செயல்படுவோம் என உறுதிமொழி எடுப்போம்.
- இன்று (நவ. 7ம் தேதி)தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

