sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை சமாளிக்க முடியல! விவசாயிகள் போராட்டம்

/

விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை சமாளிக்க முடியல! விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை சமாளிக்க முடியல! விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை சமாளிக்க முடியல! விவசாயிகள் போராட்டம்


ADDED : நவ 05, 2024 08:45 PM

Google News

ADDED : நவ 05, 2024 08:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால், விவசாயிகள் பாதித்து வரும் நிலையில், கண்டு கொள்ளாத வனத்துறையை கண்டித்து, உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட வன அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்தில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, டி.எஸ்.பி., ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் விவசாயிகள் பேசியதாவது: வன எல்லை கிராமங்கள் மட்டுமின்றி, 60 கி.மீ., துாரம் வரை பரவி, நுாற்றுக்கணக்கில் பல்கி பெருகியுள்ளன. கிராமங்களிலுள்ள ஓடைகள், புதர்கள், உப்பாறு ஓடை பகுதிகளில், தங்கி அங்கேயே, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

கிராமங்களில் இனப்பெருக்கம் செய்து, வசித்து வரும் காட்டுப்பன்றிகளை எவ்வாறு, வன விலங்காக கருத முடியும். தென்னை, வாழை, மக்காச்சோளம், நெல் என அனைத்து பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன.

பல நுாறு ஏக்கர் பயிர்கள் பாதித்து, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதோடு, உணவு உற்பத்தியும் பாதித்து வருகிறது.

விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் தாக்கி, ஒரு சில ஆண்டுகளில், 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.

கால்நடைகளும் பாதித்து வருகின்றன. இரவு நேரங்களில், பயிர்களுக்கு நீர் பாய்ச்சவோ, அவசர தேவைக்கோ வெளியே வர முடியாத அளவிற்கு, கிராமங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.

பன்றி ஒரு முறை விவசாய நிலத்திற்குள் புகுந்தால், பயிர்கள் சேதமடைவதோடு மட்டுமின்றி, கால்நடைகள் தீவனம் கூட உண்பதில்லை.

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, வன எல்லை கிராமங்கள் மட்டுமின்றி, 60 கி.மீ., துாரத்திற்கு காட்டுப்பன்றிகள் பரவியுள்ளன. இதே நிலை நீடித்தால், ஒரு சில நாட்களில், நுாறு கி.மீ., சுற்றளவிற்கு பரவி, நகர பகுதிகளுக்குள்ளும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தாலும், பயனில்லை, 50 ஆயிரம் ரூபாய் செலவழித்த பயிருக்கு, ரூ.500 இழப்பீடு என, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயித்த, சொற்ப அளவிலான இழப்பீடு வழங்க பரிந்துரைக்கின்றனர். ஆனால், ஆண்டுக்கணக்கில் அலைந்தாலும், இழப்பீடு கிடைப்பதில்லை.

இன்றைய சூழலில், விதை, உரம், பூச்சி மருந்து என பயிர்களுக்கு அதிகளவு விஷம் பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும் மயில்கள் இறந்தால், விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் காட்டுப்பன்றிகளை பிடிக்கவும், சுடவும் அனுமதியுள்ள நிலையில், தமிழகத்தில் இல்லை. எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல், குரங்குகள் கூண்டு வைத்து பிடித்து, வனத்தில் விடப்படும் என ஒரு ஆண்டுக்கு முன் தெரிவித்தனர். இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, வன எல்லையில், 70 கி.மீ., துாரத்திற்கு சோலார் மின் வேலி அமைக்கப்படும் என தெரிவித்தும், இதுவரை அமைக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் இதே போல், நடவடிக்கை எடுப்பதாக கூறும் அதிகாரிகள், தொடர்ந்து அலட்சியமாக உள்ளனர்.

இவ்வாறு பேசினர்.

மாவட்ட வன அலுவலர் பேசியதாவது: காட்டுப்பன்றியை சுட அனுமதியளிக்க, அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. ஓரிரு மாதங்களில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை, காட்டுப்பன்றி பாதிப்புகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் வன பணியாளர்கள், வாகனங்கள் பயன்படுத்தி, வன விலங்கு பாதிப்புகள் தடுக்கப்படும்.

பயிர்களுக்கான சாகுபடி செலவு, மகசூல் மதிப்பு குறித்து, விவசாயிகள் பயிர் வாரியாக பட்டியல் தந்தால், அதனை அரசுக்கு பரிந்துரை செய்து, உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும்.

காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, வணிக ரீதியில் ஈடுபடும் நபர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

இவ்வாறு, பேசினார்.






      Dinamalar
      Follow us