/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் மீது வழக்கு மீண்டும் ஒரு வழக்கிற்காக உடுமலையில் ஆஜர்
/
விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் மீது வழக்கு மீண்டும் ஒரு வழக்கிற்காக உடுமலையில் ஆஜர்
விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் மீது வழக்கு மீண்டும் ஒரு வழக்கிற்காக உடுமலையில் ஆஜர்
விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் மீது வழக்கு மீண்டும் ஒரு வழக்கிற்காக உடுமலையில் ஆஜர்
ADDED : ஜன 24, 2026 04:59 AM

உடுமலை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்ட நிலையில், தளி போலீஸ் வழக்கு பதிவுக்காக உடுமலை கோர்ட்டில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி சார்பில், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள், வளர்ப்பு கூலியை அதிகரித்து தர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 1ம் தேதி முதல், உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக, கறிக்கோழி நிறுவனங்கள் விவசாயிகளை மிரட்டி, பண்ணைகளில் கோழிக்குஞ்சுகளை இறக்குவதாக கூறி, பல இடங்களில் வாகனங்களை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்திற்கு துாண்டுதல் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மீது, திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்து, கடந்த, 13ம் தேதி இரவு, அவரை கைது செய்த போலீசார் வேலுார் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, குடிமங்கலம் மற்றும் உடுமலை ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காக, கடந்த, 20ம் தேதி, உடுமலை, ஜே.எம்.,1 மற்றும் ஜே.எம்.,2 நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி, மீண்டும் வேலுார் சிறைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், தளி ஸ்டேஷனில், எரிசனம்பட்டியில், கடந்த, 10ம் தேதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கோழி உற்பத்தி நிறுவனங்களின் வாகனங்களை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில், ஈசன் முருகசாமி மீது, அதே பிரிவுகளின் கீழ், மீண்டும் ஒரு வழக்கை தளி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கிற்காக, நேற்று ஜே.எம்.,2 நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் உமாதேவி முன்னிலையில் ஈசன் முருகசாமியை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், பிப்., 3 வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து, ஈசன் முருகசாமியை போலீசார் பாதுகாப்புடன் வேலுார் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர். உடுமலை நீதிமன்றத்திற்கு, ஈசன் முருகசாமி அழைத்து வரப்படுவதை அறிந்த, விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர்.
இதனால், ஏராளமான போலீசாரும் கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

