/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகள் 'வாக்கிங்'; வாகன ஓட்டிகள் தவிப்பு
/
கால்நடைகள் 'வாக்கிங்'; வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : டிச 15, 2025 05:19 AM

திருப்பூர்: திருப்பூர் நகர ரோடுகளில், மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
திருப்பூரில், நொய்யல் வீதி பகுதியில் இயங்கும் மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள், கன்றுக்குட்டிகளை அதிகம் வாங்குகின்றனர். இடப்பற்றாக்குறையால், அப்படியே வீதியில் விடுகின்றனர்.
நொய்யல் வீதி, யுனிவர்சல் ரோடு, யூனியன் மில் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு பகுதிகளில், கூட்டம் கூட்டமாக மாடுகள் தினமும் சுற்றிவருகின்றன.
சில நேரம், அதிக போக்குவரத்து உள்ள ரோடுகளில், கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது; சில நேரங்களில் விபத்து அபாயமும் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில்,'சமூக வலைதள வீடியோக்களில், ரோட்டில் செல்லும் மக்களை மாடுகள் முட்டி, தாக்குவதை பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது. அதேபோல், இங்கு ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள், கன்றுக்குட்டிகள் முட்டித்தாக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.
ஏற்கனவே, நெரிசல் அதிகம் உள்ள ரோடுகளில், மாடுகள் சுற்றித்திரிவால் அதிக நெருக்கடி ஏற்படுகிறது. மாநகராட்சி சார்பில், அத்துமீறி, ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். அசம்பாவிதம் ஏற்படும் முன்னதாக, மாடு வளர்ப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, உரிய பாதுகாப்புடன் பராமரிக்க அறிவுறுத்த வேண்டும்,' என்றனர்.

