/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாறைக்குழி பாதுகாப்பு! கம்பி வேலி அமைக்கப்படுமா? இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
/
பாறைக்குழி பாதுகாப்பு! கம்பி வேலி அமைக்கப்படுமா? இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
பாறைக்குழி பாதுகாப்பு! கம்பி வேலி அமைக்கப்படுமா? இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
பாறைக்குழி பாதுகாப்பு! கம்பி வேலி அமைக்கப்படுமா? இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : ஆக 06, 2025 07:41 AM
ADDED : ஆக 06, 2025 12:28 AM

பல்லடம்; இச்சிப்பட்டி போராட்டத்தின் எதிரொலியாக, சூலுார் விமானப்படை தளத்திலிருந்து, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள பாறைக்குழிகள், குப்பைகள், கழிவுகள் கொட்டப்படாமல் பாதுகாக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் கழிவுகள், குப்பைகளை, பல்லடத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பயன்பாடற்ற பாறைக்குழியில் கொட்ட முயன்றபோது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் குவிக்கப்பட்டு, குப்பை கொட்ட முயற்சி நடந்தது. கடுமையாக போராடிய விவசாயிகள், பொதுமக்கள், 6 மணி நேரத்துக்கு மேல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு இடையே, சம்பவ இடத்துக்கு வந்த சூலுார் விமானப்படைத்தள அலுவலர்கள், விமானப்படைத் தளத்தில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டால், பருந்து உள்ளிட்ட பறவைகள் வரக்கூடும். குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டம் காரணமாக, போர் விமானங்கள் பறக்கும் போது ஆபத்து உள்ளது என கருத்து தெரிவிக்கப்பட்டது. எனவே, பாறைக்குழியில் குப்பைகள், கழிவுகள் கொட்டக்கூடாது என, ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதனால், மாநகராட்சி அதிகாரிகள், குப்பை லாரிகளுடன் திரும்பி சென்றனர். இச்சிப்பட்டி பாறைக்குழியில் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள், கழிவுகளை திருப்பி எடுத்துச் செல்வதற்கு, விவசாயிகள் பொதுமக்கள், மாநகராட்சிக்கு இரண்டு வார கெடு விதித்துள்ளனர். விமானப்படைத்தளத்தில் இருந்து, 10 கி.மீ., சுற்றளவுக்குள் இதுபோன்ற கழிவுகள், குப்பைகள் கொட்டக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், அருகிலுள்ள பாறைக்குழிகள் பலவற்றில் ஏற்கனவே குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், விமானங்கள் பறப்பதில் இடையூறு ஏற்படுவதுடன், சுற்றுப்புற சூழல், நிலத் தடி நீர் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, ஆபத்தினை கருத்தில் கொண்டு, 10 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள பாறைக்குழிகளில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தடுப்பதுடன், கம்பிவேலி அமைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.