/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகரெங்கும் தேர்த்திருவிழாவுக்கான கொண்டாட்டம்... களைகட்டியது! முக்கிய வீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
/
நகரெங்கும் தேர்த்திருவிழாவுக்கான கொண்டாட்டம்... களைகட்டியது! முக்கிய வீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
நகரெங்கும் தேர்த்திருவிழாவுக்கான கொண்டாட்டம்... களைகட்டியது! முக்கிய வீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
நகரெங்கும் தேர்த்திருவிழாவுக்கான கொண்டாட்டம்... களைகட்டியது! முக்கிய வீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ADDED : ஏப் 14, 2025 04:30 AM

உடுமலை: பிரசித்தி பெற்ற உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி முக்கிய வீதிகளில், மக்கள் திரள்வதால், நகரமே விழாக்கோலத்தில் காட்சியளிக்கிறது; கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மிக பிரசித்தி பெற்றதாகும்.
இந்தாண்டு திருவிழாவுக்காக, கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டப்பட்டு, 8ம் தேதி கோவில் வளாகத்தில் கம்பம் போடப்பட்டது.
இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் இருந்து மக்கள் தீர்த்தம் எடுத்து வந்து, கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், பூவோடு எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு பகுதியிலும், மேளதாளம் முழங்க, ஊர்வலமாக தீர்த்தம் மற்றும் பூவோடு எடுத்து வருவதால், மாலை, 6:00 மணியில் இருந்து நகர வீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நாளையுடன் (15ம் தேதி) பூவோடு நிறைவு பெறுகிறது. வரும் 16ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு; மாலை, 4:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், வரும் 17ம் தேதி காலை, 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
கூடுதல் போலீசார்
நகர வீதிகளில் மக்கள் அதிகளவு திரள்வதால், கூடுதல் போலீசார் கண்காணிப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
குட்டைத்திடல், பெரிய கடை வீதி, தளி ரோடு, கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், நாள்முழுவதும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றத்தடுப்புக்காக முக்கிய வீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர்; விழிப்புணர்வுக்காக ஆங்காங்கே தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.
ஏலம் விட்டாச்சு
திருவிழாவையொட்டி, மக்கள் குட்டைத்திடல் கேளிக்கை விளையாட்டுகளையே அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதற்கான ஏலம் வருவாய்த்துறையினரால் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு நீண்ட இழுபறிக்குப்பிறகு, நேற்று முன்தினம், 43 லட்சத்து 64 ஆயிரத்து 800 ரூபாய்க்கு குட்டைத்திடல் ஏலம் விடப்பட்டது. இதையடுத்து, ஏலதாரர் தரப்பில், கேளிக்கை விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், கோவில் வளாகத்திலும், குட்டை திடல் மைதானத்திலும், நாள்தோறும் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதிலும், திரளான மக்கள் பங்கேற்று வருகின்றனர்.

