/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மையத்தடுப்பு சேதம்: மக்கள் அதிருப்தி
/
மையத்தடுப்பு சேதம்: மக்கள் அதிருப்தி
ADDED : ஜன 30, 2025 11:54 PM

திருப்பூர்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டிய மையத்தடுப்புகள், சிறிய வாகனம் உரசினாலும் அப்பளம் போல் நொருங்குவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் நகரப்பகுதியில் இருந்து காங்கயம் செல்லும் ரோடு சீரமைப்பு பணி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வருகிறது. குறிப்பாக, கோட்டை மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் இருந்து காங்கயம் கிராஸ் ரோடு ரவுண்டானா வரை, இருபுறமும் ரோடு அகலப்படுத்தப்பட்டது. ரவுண்டானா அருகே, ரோட்டை விரிவாக்கம் செய்து, வாகன போக்குவரத்தை சீராக்கும் வகையில், மையத்தடுப்பு அமைக்கப்பட்டது. வழக்கம் போல், உயரமாக அமைக்காமல், அரை அடி உயரத்தில் மட்டும் சிறிய மையத்தடுப்பு அமைக்கப்பட்டது. சிறிய வாகனங்கள் செல்லும் போது உரசினால் கூட, அப்பளம் போல், மையத்தடுப்பு நொறுங்கி கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோடு விரிவாக்க பணி பல மாதங்களாக நடக்கிறது. அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதால், குடிநீர் வினியோகமும் பல மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. மையத்தில் கட்டப்பட்ட சிறிய மையத்தடுப்பு தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளது. சிமென்ட் மிக குறைவாக பயன்படுத்தியதால், மணல், ஜல்லிக்கற்கள் தனித்தனியே வந்து கொண்டிருக்கிறது. உயரம் குறைவாக இருப்பதால், சிறிய வாகனம் உரசி சென்றாலும், சிமென்ட் கான்கிரீட் தடுப்புகள் பொலபொலவென உதிர்ந்து கொண்டிருக்கின்றன. பணிகளை நேரில் ஆய்வு செய்து, மையத்தடுப்பு தரமாக கட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

