/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்து அபாயம் தடுக்க மையத்தடுப்பு சீரமைப்பு
/
விபத்து அபாயம் தடுக்க மையத்தடுப்பு சீரமைப்பு
ADDED : ஜூலை 08, 2025 12:43 AM

பல்லடம்; பல்லடத்தில், வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சமீபத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. விபத்துகளை தவிர்க்க, நான்கு வழிச்சாலையில் மையத் தடுப்புகளும் அமைக்கப்பட்டன. நான்கு வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பின், பல்லடம், கே.என்.புரம், காரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், ஏற்கனவே இருந்த மையத் தடுப்புகள், ரோடு மட்டத்துக்கு சமமாகின.
இதனால், வாகன ஓட்டிகள், இடைவெளி விடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே 'யு-டர்ன்' எடுக்காமல், விதிமுறை மீறி, மையத் தடுப்புகளின் மீது ஏறி, 'யு டர்ன்' எடுத்து வந்தனர். இருசக்கர வாகனங்கள் மட்டுமன்றி, கன்டெய்னர்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும் இந்த விதிமீறலில் ஈடுபட்டு வந்தன.
தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் அதிவேகத்தில் பயணித்து வரும் நிலையில், வாகனங்களின் இந்த விதிமீறல், விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் ஏற்கனவே சுட்டி காட்டிய நிலையில், தற்போது, மையத் தடுப்புகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல், கே.என்.புரம், காரணம்பேட்டை பகுதியிலும் மையத் தடுப்புகளை சீரமைக்க வேண்டும்.