/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை அகற்றம் மாநகராட்சிக்கு 'சவால்'
/
குப்பை அகற்றம் மாநகராட்சிக்கு 'சவால்'
ADDED : அக் 19, 2024 12:45 AM
திருப்பூரில் தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன் அளவிலான குப்பை கழிவுகள் தினமும் சேகரமாகிறது. கடந்த வாரம் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜையின் போது 5 மடங்கு அளவுக்கும் மேல் அதிகரித்தது. குப்பை அகற்றும் பணியை 16 காம்பாக்டர் வாகனங்கள்; 37 டிப்பர் வாகனங்கள்; டிராக்டர் மற்றும் லோடர் வாகனங்கள் தலா நான்கு; ஆறு பொக்லைன்; ஹூக் பின் வாகனம் நான்கு மற்றும் 151 ஆட்டோக்கள் வாயிலாக 2 ஆயிரம் துாய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர். கடந்த நான்கு நாட்களில் நேற்று மாலை வரை ஏறத்தாழ 4,700 மெட்ரிக் டன் எடையுள்ள குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. தீபாவளிக்கும் குப்பைகளை அகற்றுவது சவாலாகவே மாநகராட்சிக்கு அமையும்.
மின் உற்பத்தி திட்டம்
மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் தரம் பிரித்து மாற்று வழிமுறையில் பயன்படுத்தப்படவுள்ளது. அவ்வகையில் 250 மெட்ரிக் டன் மக்கும் குப்பையைக் கொண்டு, சி.என்.ஜி., உற்பத்தி செய்யவும், ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்திக்கும் திட்ட அறிக்கை தயார் செய்து, இடம் தேர்வும் செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பணி துவங்கும்.
மாநகராட்சி பகுதியில் தற்போது முழுமையாக ஆறு வார்டுகளில் முழுமையாக குப்பைத் தொட்டிகள் எங்கும் இல்லை. அனைத்து வீடுகளிலும் குப்பை தரம் பிரித்து பெறப்படுகிறது. முதல் கட்ட குப்பை வீசப்படுவது தவிர்க்கப்பட்டு, செகண்டரி பாய்ன்ட் முறை; ஹூக் பின் முறையிலும் குப்பைகள் விரைவாகவும், நேரடியாகவும் அகற்றப்படுகிறது.
பாதுகாப்பான முறையில்...
குப்பைகளை பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டுவது தான் தற்போதுள்ள ஒரே தீர்வு. நகரப் பகுதியில் ஏற்கனவே ஒரு தாராபுரம் ரோட்டில் ஒரு பாறைக்குழி முறையாக மூடி அதன் மீது தற்போது பார்க் அமைக்கப்பட்டுள்ளது; மும்மூர்த்தி நகர் பாறைக்குழியும் அதே வகையில் மாற்றப்படும்.
சுற்றுப்பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் உரிய அனுமதி பெற்று தற்போது குப்பைகள் கொட்டப்படுகிறது. பாதுகாப்பான முறையில் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இப்பணி நடக்கிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி.நடப்பாண்டு, ஆயுத பூஜையின் போது வழக்கமான கழிவுகளை விட பல மடங்கு கழிவுகள் அதிகரித்து விட்டது. இடையில் மழை உள்ளிட்ட சில காரணங்களால் பணி சற்று தாமதமானது. ஆயுத பூஜையை சமாளித்து விட்டோம். தீபாவளியின் போது இந்த அளவு குப்பை சேர வாய்ப்பில்லை. இருப்பினும் அந்த பண்டிகையையும் எதிர் கொண்டு பணியாற்ற நிர்வாகம் ஊழியர்களை தயார் செய்துள்ளது.
ஆயுத பூஜையை தொடர்ந்து திருப்பூரில் சேர்ந்த குப்பைகள், கடந்த நான்கு நாட்களில் நேற்று மாலை வரை ஏறத்தாழ 4,700 மெட்ரிக் டன் அளவு அகற்றப்பட்டுள்ளன. தீபாவளிக்கும் குப்பைகளை அகற்றுவது சவாலாகவே மாநகராட்சிக்கு அமையும்.