/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவால் நிறைந்த மனதுக்கு பிடித்த வேலை
/
சவால் நிறைந்த மனதுக்கு பிடித்த வேலை
ADDED : ஜூலை 14, 2024 12:25 AM

போட்டி நிறைந்த சூழலில், மனதுக்கு பிடித்த வேலை கிடைப்பதென்பது, சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. அதிலும், அரசுப்பணி மீது தணியாத தாகம் நிறைந்த இளைஞர்கள், இளம் பெண்கள் பலர், சளைக்காமல் போட்டி தேர்வெழுத, அரசுப்பணியை எட்டி பிடிக்கின்றனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட அரசுத்துறை துவங்கி, தனியார் நிறுவனத்தினர் பலரும் போட்டி தேர்வு எதிர்கொள்வதற்கான பயிற்சியை வழங்கி வருகின்றனர்.
இதில், திருப்பூர் மாநகராட்சி சார்பில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 2.61 கோடி ரூபாய் மதிப்பில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைத்து, அதன் செயல்பாடுகளை துவக்கியுள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கான அறிவுத்தேடலுக்கு தேவையான புத்தகங்கள், அலமாரிகளில் அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி., - எஸ்.எஸ்.சி., - நீட் - வங்கி என அனைத்து வகையான போட்டி தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அழகான மேஜை, இருக்கைகள், மின்விசிறி உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் அழகுற செய்யப்பட்டு, 10 கம்ப்யூட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. வங்கிப்பணி உள்ளிட்ட சில போட்டி தேர்வுகள், கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் நிலையில், அதன் வாயிலாக பயிற்சி பெறுவதிலும், பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
நுாலகப் பணியாளர்கள் கூறுகையில், 'காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை திறந்திருக்கும் இம்மையத்தில், நாள் முழுக்க அமர்ந்து படிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதிய உணவு சாப்பிட 'டைனிங் ஹால்' வசதியும் உண்டு.
மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில் அவ்வப்போது பயிற்சியாளர்கள் இங்கு வந்து போட்டி தேர்வை எதிர்கொள்ள பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர். தினமும், 70 பேர் நுாலகத்துக்கு வருகின்றனர். அவர்களில், 60 பேர் வரை போட்டி தேர்வுக்கு படிக்கின்றனர். மிகுந்த பயன் தருவதாக, அனைவரும் கூறுவது திருப்தியாக இருக்கிறது. பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நுாலகத்துக்கு விடுமுறை. மற்றபடி அனைத்து நாட்களும் செயல்படும்,' என்றனர்.