/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடியை பள்ளி வளாகத்துக்கு மாற்றுங்க! பெற்றோர் வலியுறுத்தல்
/
அங்கன்வாடியை பள்ளி வளாகத்துக்கு மாற்றுங்க! பெற்றோர் வலியுறுத்தல்
அங்கன்வாடியை பள்ளி வளாகத்துக்கு மாற்றுங்க! பெற்றோர் வலியுறுத்தல்
அங்கன்வாடியை பள்ளி வளாகத்துக்கு மாற்றுங்க! பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2024 08:33 PM

உடுமலை : போடிபட்டி ஊராட்சியில் பூங்கா அருகே உள்ள அங்கன்வாடியை, மீண்டும் பள்ளி வளாகத்தில் மாற்ற வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
போடிபட்டி ஊராட்சியில், இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒன்று ஊராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ளது. மற்றொன்று, தற்போது ஊராட்சியில் உள்ள விளையாட்டு பூங்கா அருகே உள்ள கட்டடத்தில் செயல்படுகிறது.
பூங்கா அருகே உள்ள மையம், முன் போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டது. அப்போது, மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டனர்.
தற்போதுள்ள புதிய அங்கன்வாடி மையத்துக்கு, பத்துக்கும் குறைவான குழந்தைகள் தான் வருகின்றனர். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகள் அதிகம் உள்ளன.
அப்பகுதியிலிருந்து புதிய அங்கன்வாடி கட்டடம் தொலைதுாரம் உள்ளது. இதனால் பெற்றோர் குழந்தைகளை அழைத்து வருவதற்கு சிரமப்படுகின்றனர்.
குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது:
பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் முன் அமைக்கப்பட்டிருந்தது மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் இப்போது குழந்தைகளை புதிய மையத்துக்கு அழைத்து வருவதற்கு சிரமப்படுகிறோம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாகன வசதி உள்ளது. மற்றவர்கள் நடந்து வந்து தான் குழந்தைகளை விட வேண்டும். இதனால் பலரும் வருவதில்லை. அங்கன்வாடி இருந்தும் வர முடியாத நிலைதான் உள்ளது.
தொலைதுாரமாக இருப்பது மட்டுமே தற்போது பிரச்னையாக உள்ளது. காலையில் ஒருமுறை அழைத்து வருவதற்கும், மீண்டும் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு என இருமுறை வருகிறோம்.
குழந்தைகளும் நடந்து வருவதில் சோர்ந்து விடுகின்றனர். பள்ளி வளாகத்தில் மீண்டும் அங்கன்வாடி மையத்தை மாற்றி அமைத்தால் குழந்தைகளும் பயன்பெறும். பெற்றோரும் மகிழ்ச்சியுடன் குழந்தைகளை அனுப்ப முடியும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.