/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் மாற்றம்; பெற்றோர் வலியுறுத்தல்
/
மாணவர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் மாற்றம்; பெற்றோர் வலியுறுத்தல்
மாணவர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் மாற்றம்; பெற்றோர் வலியுறுத்தல்
மாணவர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் மாற்றம்; பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : பிப் 17, 2025 10:50 PM
உடுமலை; அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு, விபத்து காப்பீட்டு தொகை வழங்கப்படும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, பொருளாதார சூழ்நிலையால் அவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென, பல்வேறு திட்டங்கள் அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் ஒன்று, விபத்து காப்பீட்டு திட்டம். அரசுப்பள்ளி குழந்தைகளின் பெற்றோர் விபத்துகளில் சிக்கி இறந்துவிடும் பட்சத்தில், அவர்களுக்கான இழப்பீடாக குறிப்பிட்ட தொகை அந்த குழந்தைக்கு வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயன்பெற பல்வேறு விதிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் விபத்தில் இறக்கும் பெற்றோரில் ஒருவர், வருமானம் ஈட்டும் நபராக இருக்க வேண்டும். விபத்துகளால் இறப்பவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டம், பல குழந்தைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
பொருளாதார வசதியில்லாத குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், நோய் தாக்குதல், உடல்நலம் குறைபாடு, மாரடைப்பு போன்ற வேறு பல காரணங்களாலும் இறக்கின்றனர்.
இக்குழந்தைகளுக்கு இந்த காப்பீட்டு திட்டம் பயன்படுவதில்லை. மேலும், கிராமங்களில், விஷப்பூச்சி கடிகளால் இறந்துபோகும் பெற்றோரின் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே மாறுகிறது.
பொருளாதார காரணங்களால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கம் இருப்பினும், விபத்துகளால் இறப்பவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் என்ற வரையறையால், திட்டத்தின் பயன் பலருக்கும் கிடைப்பதில்லை.
இதனால், இழப்பீடு வழங்கப்படும் திட்டத்தில், மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென பெற்றோரும், கல்வி ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'விபத்துகளால் இறந்துவிடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு இத்திட்டம் பயனுள்ளதுதான். ஆனால், வேறு காரணங்களால் பெற்றோரை இழந்துவிட்டு, பொருளாதார உதவியும் இல்லாத நிலையில் குழந்தைகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு இந்த திட்டம் பயன்படாது. எனவே, திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என்றனர்.

