தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நெல் சாகுபடி வயல்களில் இஞ்சி சாகுபடிக்கு மாற்றம்!... அமராவதி ஆயக்கட்டில் வறட்சியின் தாக்கம்

நெல் சாகுபடி வயல்களில் இஞ்சி சாகுபடிக்கு மாற்றம்!... அமராவதி ஆயக்கட்டில் வறட்சியின் தாக்கம்

நெல் சாகுபடி வயல்களில் இஞ்சி சாகுபடிக்கு மாற்றம்!... அமராவதி ஆயக்கட்டில் வறட்சியின் தாக்கம்


UPDATED : செப் 02, 2026 07:37 AM

ADDED : செப் 01, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 07:37 AM ADDED : செப் 01, 2026 06:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: முப்போகம் விளைந்த அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில், வறட்சியால் இந்தாண்டு நெல் சாகுபடி கைவிடப்பட்டு, இஞ்சி உள்ளிட்ட சாகுபடிக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். வறட்சியின் தாக்கம் குறித்து கணக்கிட்டு, அரசு உதவ நெல் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கல்லாபுரம் கரைவழி பகுதியில், 1,200 ஏக்கரில், குறுவை, சம்பா, தாளடி என, முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

அமராவதி அணையில் இருந்து கல்லாபுரம் கால்வாய் வாயிலாக, இப்பகுதிக்கு பாசன நீர் வழங்கப்பட்டு வந்தது.

நீர்வளம் மிகுந்த பகுதியில், ஆற்றுப்பாசனம் குறைந்தாலும், கிணறு, போர்வெல்களை பயன்படுத்தியும் நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர்.

இந்தாண்டு அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. ஆயக்கட்டு பகுதிகளிலும் மழை இல்லாமல் வறட்சி துவங்கியது.

அணை நீர்மட்டம் உயராத நிலையில், குடிநீர் தேவைக்காக, நீர் இருப்பு வைக்கப்பட்டது. நெல் நாற்றங்கால் விடுவதற்கு கூட தண்ணீர் கிடைக்காததால், வேறு வழியின்றி முதல் போக நெல் சாகுபடியை கைவிடும் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

வழக்கமாக ஆக., மாதத்தில் துவங்கும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கும் வாய்ப்பு இல்லாததால், நெல் விளைந்த வயல்களில் இஞ்சி உள்ளிட்ட மாற்றுச்சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு, நெல் வயல்கள் சூழ்ந்து பசுமையாக காணப்படும் கல்லாபுரம் கரைவழி பகுதியில், நடப்பாண்டு அணையில் நீர் இருப்பு இல்லாமல், பாசனத்திற்கு நீர் திறக்காததால், வறட்சியால் பாரம்பரிய நெல் சாகுபடி கைவிடப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்கணும் விளைநிலங்களில் கிணறு மற்றும் போர்வெல் உள்ள விவசாயிகள், குறைந்த நீர் தேவை உள்ள இஞ்சி உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், ஆற்றுப்பாசனத்தை மட்டும் நம்பியுள்ள பெரும்பாலான விவசாயிகள் மாற்றுச்சாகுபடிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு வறட்சியால், நெல் சாகுபடி கைவிடப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள் பிரச்னை குறித்து, தமிழக அரசு வேளாண்துறை வாயிலாக கணக்கெடுப்பு நடத்தி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us