/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நான்கு வழிச்சாலை போக்குவரத்தில் குழப்பம்; இழுபறி பணிகளால் சிக்கல்
/
நான்கு வழிச்சாலை போக்குவரத்தில் குழப்பம்; இழுபறி பணிகளால் சிக்கல்
நான்கு வழிச்சாலை போக்குவரத்தில் குழப்பம்; இழுபறி பணிகளால் சிக்கல்
நான்கு வழிச்சாலை போக்குவரத்தில் குழப்பம்; இழுபறி பணிகளால் சிக்கல்
ADDED : செப் 19, 2024 10:03 PM

உடுமலை: நான்கு வழிச்சாலை போக்குவரத்தில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உடுமலை பகுதியில், இழுபறியாக உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரை, மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வாகனங்களும் அவ்வழியாக செல்லத்துவங்கியுள்ளன.
ஆனால், உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், நீண்ட காலமாக இழுபறியாக இருக்கும் பணிகளால் போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு விபத்துகளும் அதிகரித்துள்ளது.
நான்கு வழிச்சாலையில், பழநி அருகே சண்முகநதி மற்றும் மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், இரண்டு ரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு, பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
ஆனால், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை மற்றும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலை குறுக்கிடும் இடங்களில், உயர் மட்ட பாலம் கட்டும் பணி நீண்ட காலமாக இழுபறியாக உள்ளது.
பாலங்களை ஒட்டி அணுகுசாலை அமைக்கும் பணிகளும் நிறைவு பெறாமல் உள்ளது. இதனால், மேற்குப்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் செல்லும் வழி தெரியாமல் குளறுபடி ஏற்படுகிறது.
அருகிலுள்ள மாநில நெடுஞ்சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படுகிறது. போதிய தகவல் பலகையும் இல்லாததால், பணிகள் நிறைவு பெறாத பகுதிக்கு சென்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வாக இழுபறியாக இருக்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை அப்பகுதியில் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.