/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறையில் சிறுவர்கள் உற்சாகம்; 'எமன்' ஆக மாறும் பாறைக்குழிகள்
/
விடுமுறையில் சிறுவர்கள் உற்சாகம்; 'எமன்' ஆக மாறும் பாறைக்குழிகள்
விடுமுறையில் சிறுவர்கள் உற்சாகம்; 'எமன்' ஆக மாறும் பாறைக்குழிகள்
விடுமுறையில் சிறுவர்கள் உற்சாகம்; 'எமன்' ஆக மாறும் பாறைக்குழிகள்
ADDED : ஏப் 22, 2025 06:30 AM

திருப்பூர்; கடந்த வெள்ளிக் கிழமை, சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றார், பல்லகவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் லோகேஷ்.
'விளையாடி முடித்து விட்டோம். சோர்வாக உள்ளது. அருகில் தான் பாறைக்குழி உள்ளது. ஜாலியாக குளிக்கலாம்' என, நண்பர்களுக்குள் முடிவெடுக்க, தனக்கு நீச்சல் தெரியாது என்பதை, லோகேஷ் கவனத்தில் கொள்ளவில்லை.உற்சாக மிகுதியில் குன்னத்துார், காவுத்தாம்பாளையம் பாறைக்குழியில் நண்பர்களுடன் நீரில் குதித்துள்ளார். திடீரென லோகேைஷ காணவில்லை. சிறிது நேரத்தில் லோகேஷ் சடலமாக பாறைக்குழி நீரில் மிதந்துள்ளார். ''கிரிக்கெட் விளையாட சென்ற மகன், இப்படி இறந்துட்டானே'' என குடும்பத்தினர் கதறி அழுதனர்.
''கோடை விடுமுறை துவங்கி விட்டது. குஷியாகி மாணவர்கள் விளையாட செல்வர்; தவிர்க்க முடியாதது தான். ஆனால், அவர்கள் எங்கே விளையாடச் செல்கின்றனர் என பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் தொடர்பில் இல்லை என்றால் உடனே நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும்'' என்று எச்சரிக்கிறது மாவட்ட நிர்வாகம்.
பயமறியா இளங்கன்றுகள்
திருப்பூர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய, உதவி மாவட்ட அலுவலர், வீரராஜ் கூறியதாவது:
உற்சாக மிகுதியில் நீர்நிலைகளில் நண்பர்களுடன் சிறுவர், சிறுமியர் குளிக்கும்போது, 'நீயும் குதி' என ஜாலியாக சொல்லி விடுவார்கள். தண்ணீரை பார்த்தால் எல்லோருக்கும் அலாதிபிரியம் வரும்; குதுாகலத்தில் பயம் தெரியாது; ஆபத்து மறந்து விடும்.பாறைக்குழிகள் பலவற்றில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கும்.
ஆழத்தைக் கணிக்க முடியாது
ஆழம் இவ்வளவு தான் என்பதை கணிக்காமல் இறங்கவே கூடாது. பாறைக்குழி தண்ணீர் தெளிவில்லாத தண்ணீர் என்பதால், சூரிய ஒளி ஊடுருவ வாய்ப்பு இருக்காது. குறைந்த ஆழத்தில் ஒருவர் மூழ்கியிருந்தாலும் கண்டுபிடிப்பது சிரமம். எனவே, கல்குவாரி, கிணறுகளில், பாறைக்குழியில் இறங்கவே கூடாது.
பெற்றோரே உடனிருங்கள்
நீர்நிலைகளுக்கு குழந்தைகள் சென்றால், பெற்றோர் கட்டாயம் உடனிருக்க வேண்டும். பார்வையிலேயே குழந்தைகளை வைத்திருக்க வேண்டும். சுற்றுலா செல்லும் போது பெரியவர்களுக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், கொண்டாட்டங்களின் போது மிக கவனமாக இருக்க வேண்டும். நீர்ச்சுழல், சேறுகளில் புதைகுழிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
ஒரு நிமிடத்தில் மாறும்
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கோடையில் ஜாலியாகப் பொழுது போக்கலாம். தண்ணீரில் ஆட்டம் போடலாம் என பயணத்தை துவங்கும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள், நீர் நிலைகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்வதை தவிர்க்க வேண்டும். கவனமுடன் இல்லாவிட்டால், ஒரு நிமிடத்தில் எல்லாம் மாறிவிடும். இவ்வாறு, வீரராஜ் தெரிவித்தார்.