/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படை திரட்டிய சின்னமலை; பதைபதைத்த பகைவர் கூட்டம்
/
படை திரட்டிய சின்னமலை; பதைபதைத்த பகைவர் கூட்டம்
ADDED : ஆக 14, 2025 09:40 PM

ஆ ங்கிலேயருக்கு எதிரான போராட்டத்துக்கு வித்திட்டவர் தீரன் சின்னமலை.
ஈரோடு மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் ரத்தினசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதிக்கு கடந்த, 1756, ஏப்., 17ம் தேதி பிறந்தவர் தீரன் சின்னமலை.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போரில், கடந்த, 1802ல் தமிழகத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று ஓடாநிலை போர். கர்னல் மேக்ஸ்வெல் தலைமையிலான பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக, தீரன் சின்னமலை தனது கோட்டையை சாதுர்யமாக பாதுகாத்தார் என்பது வரலாறு.
மற்றொன்று, சின்னமலையை கைப்பற்றத் துடித்த ஆங்கிலேயர்கள், 1804ல் அரச்சலுாரில், ஜெனரல் ஹாரிஸ் தலைமையில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முறியடிக்க, தீரன் சின்னமலை கையெறி குண்டுகளை பயன்படுத்தி, ஆங்கிலேயரை பின்வாங்கச் செய்திருக்கிறார்.கடந்த, 1801ல் காவிரி ஆற்றங்கரையில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியிருக்கிறார். ஆங்கிலேயருக்கு எதிரான போரில், திப்பு சுல்தானுக்கு ஆதரவாக, 1,000 பேர் கொண்ட ஒரு படையை திரட்டியிருக்கிறார். திப்பு சுல்தான் மறைவுக்கு பின், ஆங்கிலேயருக்கு எதிரான போரை சின்னமலை தொடர்ந்திருக்கிறார். சின்னமலையின் தீரத்தில் ஆங்கிலேயர்கள் பதைபதைத்திருக்கின்றனர்.
கடந்த, 1805ல், தனது சமையல்காரர் நல்லப்பன் என்பவரால், காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயர்களால் சின்னமலை பிடிக்கப்பட்டார். 1805ல், சங்ககிரி கோட்டையில் துாக்கிலிடப்பட்டார்.
சின்னமலையின் புகழ் என்றென்றும் மறையாது!
தீரன் சின்னமலையின் வீரம் செறிந்த வரலாறு, நீண்ட காலமாக மறைக்கப்பட்டே இருந்தது. பின், வாய்மொழி தகவல்களும், புலவர் குழந்தை எழுதிய குறிப்புகளும், தீரன் சின்னமலை மரபை பாதுகாக்க உதவியது. போர் மேகம் சூழ்ந்த அவரது வாழ்க்கை பயணத்தில், கோவில்களுக்கு திருப்பணிகள் செய்தார்; புலவர்களை ஆதரித்தார்.
இதில் குறிப்பிட்ட தக்க சிறப்பு என்னவெனில், அவரது கூட்டமைப்பில், கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர் என பலரும் அங்கம் வகித்தார். ஜாதி, மதம், இனம் என்ற எந்தவொரு பாகுபாடுமின்றி, தேச விடுதலை, சேவை என்ற கோட்பாடுடன் வாழ்ந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பெரிதாக பேசப்படவில்லை. அதன்பிறகு, அவரது வரலாறு பல இடங்களிலும் பேசு பொருளாக மாற, கொங்கு மண்டல இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் எழுச்சியும், அவரை போன்று சேவை, பற்று நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
- முருகேசன், மாநில தலைவர், கொங்குநாடு விவசாயிகள் கட்சி.