/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூமிதான நிலத்தில் பட்டா கேட்டு அடம்; கயிறு கட்டி இடம் பிடித்த பொதுமக்கள்
/
பூமிதான நிலத்தில் பட்டா கேட்டு அடம்; கயிறு கட்டி இடம் பிடித்த பொதுமக்கள்
பூமிதான நிலத்தில் பட்டா கேட்டு அடம்; கயிறு கட்டி இடம் பிடித்த பொதுமக்கள்
பூமிதான நிலத்தில் பட்டா கேட்டு அடம்; கயிறு கட்டி இடம் பிடித்த பொதுமக்கள்
ADDED : ஜூலை 20, 2025 01:28 AM

பல்லடம்: பல்லடம் அருகே, பூமிதான நிலத்தில் பட்டா வழங்க கோரி அடம்பிடித்த பொதுமக்கள், கயிறுகள் கட்டி இடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அடுத்த, மாணிக்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், 8.50 ஏக்கரில் பூமிதான வகைப்பாடு நிலம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று முன்தினம் இந்த இடத்தில் குடும்பத்தினருடன் முகாமிட்டனர். நேற்று காலை, தங்களுக்கே ஒதுக்கப்பட்ட பட்டா நிலத்தைப் போன்று, கயிறுகள் கட்டி குடும்பத்துடன் குடியேறினர். இடத்தை விட்டு நகராமல், அங்கேயே சமைத்தும் சாப்பிட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக வருவாய்த் துறையிடம் கோரிக்கை மனு அளித்து வருகிறோம். இடத்தை தருகிறோம் என்று மட்டுமே கூறிவரும் அதிகாரிகள், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே, இந்த நிலம், திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை கொட்ட ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. நான்கு ஆண்டாக போராடி வரும் எங்களுக்கு வீட்டு மனை வழங்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதால், மனுக்கள் வழங்கிய அனைவரும் இங்கு வந்துள்ளோம். அதிகாரிகள் பதில் கூறவில்லை எனில் குடிசை அமைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளது. தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்டு, அரசு உத்தரவின் பேரில் பட்டா வழங்கப்படும். இது, பூமிதான வகைப்பாடு நிலம் என்பதால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இது குறித்து தெரியாமல் பொதுமக்கள் இங்கு கூடியுள்ளனர்,' என்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.