ADDED : அக் 26, 2025 03:10 AM
திருப்பூர்: மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் போனஸ் உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு காண, சி.ஐ.டி.யு., கோரிக்கை விடுத்துள்ளது.
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) செயலாளர் ரங்கராஜ், மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனரிடம் அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துாய்மை மற்றும் பிற பணி ஊழியர்கள் ஊதியம், போனஸ் பிரச்னை குறித்து வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்தனர்.
நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்த ஆண்டு போனஸ் 6 ஆயிரம் ரூபாய், நடப்பு மாதம் முதல் துாய்மைப் பணியாளருக்கு தினக்கூலி, 513 ரூபாய், டிரைவருக்கு, 867 தினக்கூலி வழங்குவது, சம்பள ரசீது வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால், வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.
ஆனாலும், ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் கொண்ட போனஸ் தொகை வழங்கவில்லை. மேலும், 4 மண்டலங்களிலும் உள்ள ஒப்பந்த நிறுவனங்கள் குடிநீர் பணியாளர்களுக்கு மாத ஊதியம் குறைவாகவே வழங்குகிறது. கடந்தாண்டு, 6 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்பட்டது. இரண்டாவது மண்டலத்தில் ஒப்பந்த நிறுவனம் இந்த ஆண்டு ஒரு மாத ஊதியம் போனசாக வழங்கியுள்ளது.
ஒன்று மற்றும் 2வது மண்டலத்தில் (ஒரு பகுதி) மற்றும் மூன்றாவது மண்டலத்தில், 3 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நான்காவது மண்டலத்தில் இதுவரை வழங்கவில்லை. எனவே, இப்பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

