குப்பைகள் தரம் பிரித்து வழங்குங்கள்: மாநகராட்சி வேண்டுகோள்
குப்பைகள் தரம் பிரித்து வழங்குங்கள்: மாநகராட்சி வேண்டுகோள்
UPDATED : ஆக 22, 2026 10:45 PM
ADDED : ஆக 22, 2026 10:02 PM
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களிடம் உருவாகும் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஈரக்கழிவு - பச்சை: சமையலறை, உணவு, காய்கறி, பழம், இறைச்சி கழிவுகள், டீத்துாள், காபித்துாள், முட்டை ஓடுகள் உள்ளிட்ட மக்கும் கழிவுகள்.
உலர்கழிவு - நீலம்: காகிதம், அட்டை, செய்தித்தாள், புத்தகம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி, துணி, பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட மக்காத கழிவுகள்.
சுகாதாரக் கழிவு - சிவப்பு: பயன்படுத்திய டயபர், சானிட்டரி நாப்கின், டாம்பன், ஆணுறை உள்ளிட்ட சுகாதாரக் கழிவுகள்.
வீட்டு அபாயகரக் கழிவு - கருப்பு: பெயின்ட், பூச்சிக்கொல்லி டப்பாக்கள், பல்ப், டியூப்லைட், காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச வெப்பமானிகள், பேட்டரிகள் மற்றும் வீட்டு மின்னணுக் கழிவுகள்.
சேகரிப்பு நாட்கள்
பச்சை நிற ஈரக்கழிவு தினசரி, நீல நிற உலர்கழிவு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சிவப்பு நிற சுகாதாரக் கழிவு தினசரி, கருப்பு நிற சிறப்பு கவனிப்புக் கழிவு சனிக்கிழமையும் சேகரிக்கப்படும்.
இந்த நடைமுறை தற்போது சோதனை முறையில் நான்கு மண்டலங்களில் தலா ஒரு வார்டில் செயல்படுத்தப்படுகிறது.மண்டலம் 1-வார்டு 12, மண்டலம் 2-வார்டு 7, மண்டலம் 3-வார்டு 47, மண்டலம் 4-வார்டு 37 ஆகிய பகுதிகளில் அட்டவணைப்படி குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் இந்த நடைமுறை பிற வார்டுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து 23-வது வார்டு அண்ணா சாலை, 7-வது வார்டு நஞ்சப்பா நகர், 47-வது வார்டு போலீஸ் குடியிருப்பு, 38-வது வார்டு செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று விழிப்புணர்வு மற்றும் விளக்கக் கூட்டங்கள் நடந்தன. மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும், கடந்த வாரம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் திடக்கழிவு தரம் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குப்பைகளை உரிய முறையில் தரம் பிரித்து வழங்கி, மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
