ADDED : ஆக 22, 2026 10:53 PM
திருப்பூர், ஆக. 23– ஆயத்த ஆடை உற்பத்தி, பூஜ்ஜிய கழிவுநீர் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் திருப்பூர், திடக்கழிவு மேலாண்மையிலும் முன்னுதாரணமாக உருவெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜகார்த்தாவில் நடந்த உலகளாவிய நிலையான வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்ற சென்னை சவீதா பல்கலை., கழிவு மேலாண்மை விஞ்ஞானி அசோக்குமார் வீரமுத்து கூறியதாவது:
உலக நாடுகள் குப்பையை வளமாக மாற்றி வருகின்றன. இந்தியாவில் உணவு, காய்கறி, பழம், விவசாயம் மற்றும் மரக்கழிவுகளில் இருந்து எரிவாயு, உரம், மின்சாரம், உயிரி எரிபொருள் தயாரிக்க முடியும். குப்பையை உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பதே முதல் படி. மறுசுழற்சி, உயிரி வாயு, ஆற்றல் மீட்டெடுப்பு என ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும்.
2026க்கு பிறகு குப்பை மேலாண்மையை தாண்டி, ‘குப்பையிலிருந்து ஆற்றல்’, ‘குப்பையிலிருந்து செல்வம்’, ‘சுழற்சி பொருளாதாரம்’ என்ற பாதையில் இந்தியா செல்ல வேண்டும். இந்த அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்துறையினர் இணைந்து செயல்படுத்தும் ‘திருப்பூரில் நல் திருப்பம்’ திட்டம், திடக்கழிவு மேலாண்மையில் சிறந்த முன்னுதாரணமாக அமையும்.
