UPDATED : ஆக 22, 2026 11:00 PM
ADDED : ஆக 22, 2026 10:53 PM

திருப்பூர்:திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த 'ஒன் டூ ஒன்' எனப்படும் நான் ஸ்டாப் பஸ்களை, காலை, மாலை பீக் ஹவர்ஸில் மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்ட இந்த பஸ்கள், நடுவழியில் நிற்காமல் நேரடியாக சென்றதால் பயண நேரம் கணிசமாக குறைந்தது. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால், போதிய பயணிகள் இல்லாதது, டீசல் செலவுக்கு ஏற்ப கிலோ மீட்டருக்கு வருவாய் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக குறைக்கப்பட்ட இந்த சேவை, தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
உடுமலை, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் திருப்பூருக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
பயணிகள் குறைவாக இருக்கும் நேரங்களில் நான் ஸ்டாப் பஸ்களை இயக்க வேண்டியதில்லை. அதேநேரம், பீக் ஹவர்ஸில் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஓரிரு பஸ்களை 'ஒன் டூ ஒன்' சேவையாக இயக்கினால், பயண நேரம் குறையும்.
கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும், விரைவாக சென்றடைய விரும்பும் பயணிகள் பயன்படுத்த தயாராக உள்ளனர். எனவே, அதிக கூட்டம் உள்ள வழித்தடங்களில் பரிசார்த்த முறையிலாவது நான் ஸ்டாப் பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும்.
