UPDATED : அக் 18, 2026 05:59 PM
ADDED : அக் 18, 2026 05:54 PM
திருப்பூர்: திருப்பூர் சின்னசாமியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைகளால் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருவதால், உடனடி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கட்டடங்களின் பழுதுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் மாநகராட்சி கமிஷனர் அமித், முதன்மைக் கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் ஆகியோர் நேற்று பள்ளியில் ஆய்வு செய்தனர்.
பழைய வகுப்பறைகள் பல இடங்களில் பழுதடைந்துள்ளதால், மாணவர்கள் சிரமத்துடன் கல்வி கற்கும் நிலை உள்ளது. அதேசமயம், ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக 14 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளதால், தற்போது பயன்பாட்டில் உள்ள வகுப்பறைகளை உடனடியாக இடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, தற்போதைக்கு தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
