/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்தமே சிறந்த சுகாதாரம் தரும்!
/
சுத்தமே சிறந்த சுகாதாரம் தரும்!
ADDED : நவ 19, 2024 06:28 AM
'சுத்தம், சுகாதாரத்தின் அடிப்படை தேவையான தனிநபர் கழிப்பறை திட்டம் என்பது, மத்திய, மாநில அரசுகளின் தொடர் கண்காணிப்பு, ஊக்குவிப்பால், எதிர்பார்த்த பலன் தந்திருக்கிறது' என்கின்றனர், உள்ளாட்சி நிர்வாகத்தினர்.
மலேரியா, வயிற்றுப்போக்கு, நோய்க்கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படும் காய்ச்சல் போன்ற பலவித நோய்களுக்கு, திறந்தவெளி கழிப்பிடங்கள் தான் வரவேற்பறைகளாக இருந்தன.
கடந்த, 2014ல், மத்திய அரசு, திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்க, துாய்மை இந்தியா திட் டத்தை கொண்டு வந்தது. வீடுகள் தோறும் தனி நபர் கழிப்பறை அமைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
கழிப்பறை கட்ட, 12 ஆயிரம் ரூபாய் மானியமும் வழங்கப்பட்டது. இத்திட்டம், ஒரு இயக்கமாகவே மாற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, 'திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி' என்ற நிலையை, 90 சதவீதத்துக்கும் அதிகமான ஊராட்சிகள் பெற்றிருக்கின்றன.
இது குறித்து, ஊரக வளர்ச்சி இயக்குனர், கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'தமிழகத்தில் உள்ள, 12,525 கிராம ஊராட்சிகள், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்தகைய ஊராட்சிகள், 'ODF Plus -Aspiring' என வகைப்படுத்தப்படும்; அந்த ஊராட்சிகள் 'நிலையான திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சி' என்ற நிலையை தக்க வைக்க வேண்டும்; இது, 'ODF Plus' வகைபாடுக்குள் கொண்டு வரப்படும்,' என கூறப்பட்டுள்ளது.
- இன்று உலககழிப்பறை தினம்
விடா முயற்சிக்கு கிடைத்த பலன்
திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலை உட்பட, சுத்தம், சுகாதாரம் சார்ந்த பணிகளை ஊக்குவிக்கவும், அதுதொடர்பான திட்டங்களை ஏற்படுத்தவும், கடந்த, 2009ல், 'நிர்மல் பாரத் அபியான்' (துப்புரவு பரப்புரை இயக்கம்) என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் செயல்பாடு, நோக்கம் எதிர்பார்த்தளவு பலன் தராத நிலையில், 2014ல், 'ஸ்வட்ச் பாரத் அபியான்' (துாய்மை இந்தியா திட்டம்) என்ற பெயரில் அத்திட்டம் நடைமுறைக்கு வந்து, தற்போது பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சுத்தம், சுகாதாரம் அதனால் ஏற்படக்கூடிய மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாகவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தான், ஐ.நா.,சபை ஆண்டுதோறும், நவ., 19ம் தேதியை உலக கழிப்பறை தினம் என அறிவித்துள்ளது.