/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் அழைப்பு; போராட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு
/
பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் அழைப்பு; போராட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு
பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் அழைப்பு; போராட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு
பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் அழைப்பு; போராட்டம் ஒத்திவைப்பதாக அறிவிப்பு
ADDED : மார் 16, 2024 02:06 AM
திருப்பூர்:மின் கட்டண உயர்வு குறித்து பேச, முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதால், தேர்தல்கால போராட்டம் ஒத்திவைக்கப்படுமென, மின்நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், மின்சார நிலை கட்டணம், 420 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாலும், 'பீக்ஹவர்' மின் கட்டணம் விதிக்கப்பட்டாலும், குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்துறையினர் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை உருவாக்கி, அறவழியில் போராடினர்.
எட்டு கட்ட போராட்டம் நடத்தியும், முதல்வர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை. இதன்காரணமாக, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், லோக்சபா தேர்தல்கால போராட்டம் நடத்த திட்டமிட்டனர். தேர்தலில் போட்டியிட்டு, நெருக்கடி கொடுக்கலாமென உத்தேசித்திருந்தனர்.
பொள்ளாச்சி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வரை சந்திக்க, கூட்டமைப்பினர் முயற்சித்தனர். சென்னைக்கு வந்து சந்திக்குமாறு, முதல்வர் அழைத்துள்ளதால், போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எந்நேரமும், கோட்டையில் இருந்து அழைப்பு வரும் என, தொழில்துறையினர் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துரத்தினம் கூறகையில், ''தலைமை செயலகம் வந்து சந்தித்தால், அமைச்சர், அதிகாரிகளை வைத்து பேசி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேர்தல்கால போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இனியாவது, முதல்வர் நிச்சயம் மின்கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். முதல்வர் அழைத்து பேசாதபட்சத்தில், போராட்டத்தை மீண்டும் கையில் எடுப்போம்,'' என்றார்.

