/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் 16ல் போராட்டம் துவக்கம்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் 16ல் போராட்டம் துவக்கம்
ADDED : அக் 11, 2024 11:47 PM

பல்லடம் : ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி முதல் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம் துவங்க உள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, 100 நாட்கள், 100 ரேஷன் கடைகள் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. கோவை மாவட்ட பகுதிகளில், அக்., 1 முதல் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி கூறியதாவது: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, கோவை மாவட்டத்தை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட பகுதிகளில், போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதன்படி, பொங்கலுார் ஒன்றியம், கொடுவாய் பகுதி ரேஷன் கடை முன்பாக, முதல் கட்ட போராட்டம், 16ம் தேதி துவங்குகிறது.
தொடர்ந்து, பல்லடம், குண்டடம், அவிநாசி, திருப்பூர் ஒன்றிய பகுதிகளில் அடுத்தடுத்த போராட்டங்கள் நடத்தப்படும். ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிப்பது மட்டுமின்றி, சத்துணவிலும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில் இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.