/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் திருட்டு; விவசாயிகள் அச்சம்
/
தேங்காய் திருட்டு; விவசாயிகள் அச்சம்
ADDED : ஜூலை 09, 2025 11:05 PM
பொங்கலுார்; தேங்காய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை விவசாயிகளே எதிர்பார்க்கவில்லை. தோப்புகளில் ஒரு காய் குறைந்தபட்சம், 30 ரூபாய்க்கும், அதிகபட்சம், 40 ரூபாய்க்கும் விலை போகிறது.
தேங்காயில் கிடைக்கும் கழிவு பொருளான தொட்டியும், உரிமட்டையுமே ஐந்து ரூபாய்க்கு குறைவில்லாமல் விலை போகிறது. தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தேங்காய் திருட்டும் அதிகரித்துள்ளது.
சில விவசாயிகள் சிறிய அளவில் திருட்டு நடந்தால் புகார் தருவதில்லை. புகார் கொடுத்தாலும் போலீசாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இது திருடர்களுக்கு வசதியாக போய் விடுகிறது. பல விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக தேங்காய்களை அறுவடை செய்தவுடன் விற்பனை செய்து விடுகின்றனர்.
ஆனால், திருடர்கள் மரத்தில் ஏறி தேங்காயை பறிக்க துவங்கியுள்ளனர். பொங்கலுார் - செட்டிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், 55 தோட்டத்தில் இருந்த மரத்தில் ஏறி, 200க்கும் மேற்பட்ட தேங்காய்களை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.