/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளை ஈக்களால் மடியும் தென்னைகள்
/
வெள்ளை ஈக்களால் மடியும் தென்னைகள்
ADDED : பிப் 12, 2024 12:54 AM
திருப்பூர்:'வெள்ளை ஈக்கள் தாக்கிய தென்னை மரத்தை வேருடன் பிடுங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது; இதனால், பேரிழப்பு'' என்று தென்னை விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப் பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல், விவசாயிகள் திணறிவருகின்றனர்.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது: குறிப்பாக, வேளாண் துறை வழங்கும் ஒட்டுரக தென்னை மரங்கள், வெள்ளை ஈ தாக்குதலுக்கு அதிகளவில் இரையாகி வருகின்றன.
ஒட்டுரக தென்னை மரங்கள், மாதம் ஒருமுறை பாளை விடும். 15 ஆண்டு தென்னை மரத்தில், 15 முதல் 20 ஓலைகள் இருக்கும்.
வெள்ளை ஈக்கள், ஓலைகளில் உள்ள பச்சையத்தை முழுமையாக உறிஞ்சிவிடுவதால், மரங்கள் பாளை விடுவதில்லை. 15 ஆண்டு முன்பு வரை, ஒரு ஏக்கருக்கு (70 மரங்கள்), மூவாயிரம் காய் மகசூல் கிடைத்துவந்தது. வெள்ளை ஈ தாக்குதலால், வெறும் ஆயிரம் காய் மட்டுமே மகசூல் பெறமுடிகிறது.
மஞ்சள் நிறத்தில் அட்டையில் எண்ணெய் தடவி வைத்தால் ஈக்கள் ஒட்டிக்கொள்ளும் என்கின்றனர் வேளாண் துறையினர்; ஆனால், அதிகாரிகள் கூறும் இந்த வழிமுறை பயனளிக்கவில்லை. பவர் ஸ்பிரே மூலம், தென்னை ஓலைகளின் பின்புறத்தில் தண்ணீரை அதிவேகமாக அடித்து, வெள்ளை ஈக்களை விரட்டுகிறோம். இதற்காக, ஐந்து ஏக்கருக்கு 2 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பவர் ஸ்பிரே செய்வதற்கு, ஆறாயிரம் ரூபாய் செலவிடவேண்டியுள்ளது.
ஒரு மாதத்தில் மீண்டும் வெள்ளை ஈக்கள் படையெடுத்து விடுகின்றன. இந்த ஈ தாக்கிய மரத்தை வேருடன் பிடுங்கி அகற்றவேண்டிய நிலை ஏற்படுகிறது; இதனால், தென்னை விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.