/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை, நீலகிரி மாமழை; திருப்பூருக்குப் பெரும் வரம்
/
கோவை, நீலகிரி மாமழை; திருப்பூருக்குப் பெரும் வரம்
ADDED : ஆக 03, 2024 10:14 PM

நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் பருவமழை, திருப்பூர் மாவட்ட மக்களின் தாகம் தணிப்பதோடு மட்டுமல்லாமல், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பசுமை, செழுமைக்கு காரணமாக இருக்கிறது.
கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை, இம்முறை சரியான சமயத்தில் பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்யும் மழையால், ஓடை, ஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து, பெருக்கெடுக்கிறது.நீலகிரியில் பெய்யும் மழைநீர் பில்லுார் அணையில் நிரம்புகிறது; அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வழியாக கோவை, மேட்டுப்பாளையம், அன்னுார், அவிநாசி, திருப்பூர் மக்களின் குடிநீர் தேவையையும், பாசனத்துக்கான நீர்த்தேவையையும் பூர்த்தி செய்கிறது.
அதே போன்று, கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் நொய்யல் ஆற்று நீர், பேரூர், கோவை, சூலுார், திருப்பூர், கொடுமணல் நகரங்கள் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. இந்த நதி நீரும் திருப்பூரின் நிலத்தடி நீர் வளம் பெருகவும், விவசாயத்துக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டமும் அங்குள்ள 'குளுகுளு' ஊட்டியும், வெறும் சுற்றுலா தலம் என்ற அடிப்படையில் மட்டுமே பார்த்து வந்த திருப்பூர் மக்கள், அம்மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் தான், நமக்கான உயிர்நீர் என்பதை உணர துவங்கியிருக்கின்றனர்.--