/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாறு வழித்தட ஆக்கிரமிப்பு கலெக்டர் விசாரணை துவக்கம்
/
நல்லாறு வழித்தட ஆக்கிரமிப்பு கலெக்டர் விசாரணை துவக்கம்
நல்லாறு வழித்தட ஆக்கிரமிப்பு கலெக்டர் விசாரணை துவக்கம்
நல்லாறு வழித்தட ஆக்கிரமிப்பு கலெக்டர் விசாரணை துவக்கம்
ADDED : டிச 11, 2025 04:52 AM
திருப்பூர்: அவிநாசி சீனிவாசபுரத்தில் நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து, தி.மு.க., அலுவலகம் செயல்படுவதாக ஐகோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கின் உத்தரவு அடிப்படையில் கலெக்டர் விசாரணையை துவக்கியுள்ளார்.
அன்னுார் கஞ்சப்பள்ளி பகுதியில் சிற்றோடையாக ஊற்றெடுக்கும் நல்லாறு, அவிநாசி, பூண்டி, திருப்பூர் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த ஆறு, பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க., இளைஞர் பாசறை அவிநாசி நகர செயலாளர் பூபதிராஜா, 'சீனிவாசபுரத்தில் நல்லாற்றை ஆக்கிரமித்து தி.மு.க., அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது; அதை அகற்ற வேண்டும்' என, கடந்த அக்., மாதம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 'இந்த புகார் தொடர்பாக, 3 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் கலெக்டர், இரு தரப்பினரையும் அழைத்து, விசாரணை நடத்தினார். புகார்தாரர் சார்பில் பூபதிராஜா, தி.மு.க., அலுவலகம் சார்பில் மனோகரன் ஆகியோர் ஆஜராகி, அவரவர் தரப்பு நியாயங்களை விளக்கினர்.
பூபதிராஜா கூறியதாவது:
இந்த வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு, அக். 11ம் தேதி, அப்போதைய தாசில்தார் சந்திரசேகர், ஐகோர்ட்டில் சமர்பித்த ஆவணத்தில், சீனிவாசபுரத்தில், சர்வே எண். 80, 81ல் செயல்படும், தி.மு.க. அலுவலக கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நில அளவை செய்ததில், சர்வே எண்.80, 81/78 என்ற உட்பிரிவில் இக்கட்டடம் உள்ளது.
இந்த நிலத்தில் நல்லாறு நதியும் செல்கிறது. இக்கட்டடத்தில் ஒரு புற சுவர், நல்லாற்றின் நீர்வரத்து பாதையில் அமைந்துள்ளது.
மழைக்காலங்களில் பெய்யக்கூடிய நீர், கட்டடம் கட்டப்பட்டுள்ள இடத்தின் வாயிலாக நல்லாற்றில் சேருகிறது என குறிப்பிட்டு, கடிதம் தாக்கல் செய்துள்ளனர். அதை சுட்டிக்காட்டி, எனது தரப்பு விளக்கத்தை மாவட்ட கலெக்டரிடம் தெளிவுபடுத்தியுள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

