/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்க்கோபுரங்களாக திகழும் மலைகள்
/
நீர்க்கோபுரங்களாக திகழும் மலைகள்
ADDED : டிச 11, 2025 04:51 AM

மேகக்கூட்டங்களை தொட்டு உரசும், பூமிப்பந்தின் கிரீடங்களாக மலைகள் திகழ்கின்றன. தென்னக பகுதியில் கிட்டத்தட்ட, 1,200 கி.மீ., நீளத்துக்கு வளைந்து நெளிந்து செல்லும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார வளம் அடங்கியுள்ளது. தென்னக நதிகளும் இம்மலை சார்ந்தே உள்ளன.
இதன் மிக முக்கிய உயிர்க்கோளமான நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரை நம்பியே, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்கள் வாழ்கின்றனர். மலைகளையும், மலை சார்ந்த இடங்களையும் காப்பாற்றாமல் போனால், எதிர்காலத்தில் நீர், உணவு, காற்று இல்லாமல் போகும் என்பதை உணர்த்தவும், அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும், டிச. 11 அன்று, 'உலக மலைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
தாகம் தீர்க்கும்
உணவு தரும்
சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் நம்மிடம் பகிர்ந்தவை:
மலைகளை ஒரு நாள் மட்டும் கொண்டாடிவிட்டு கடந்து போகக்கூடாது; தினம் தினம் கொண்டாடப்பட வேண்டும். இந்த பூமியில், 27 சதவீதம் நிலப்பரப்பு மலைகளால் சூழப்பட்டுள்ளது; 15 சதவீத மக்கள் மலைகளை நம்பி வாழ்கின்றனர். மலைகளில், நிறைந்திருக்கும் பாறைகளில் தான் வானுயர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கின்றன; அங்கு பெய்யும் மழை தான் ஆறு, ஓடைகளில் வழிந்தோடி மக்களின் தாகம் தணிக்கிறது; உலகின் நீர் கோபுரங்கள் மலைகள்; உணவு தேவையில், 80 சதவீதத்தை மலைகள் தான் வழங்கி வருகின்றன.
அபாயத்தை உணர்வோமா?
நீலகிரி மலையில் உருவாகி வழிந்தோடி வரும் மழைநீரை நம்பிதான், வானம் பார்த்த பூமியான திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்கள் செழிப்படைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் மிக முக்கிய உயிர்க்கோளமான மலைகள் காப்பாற்றப்பட வேண்டும். அங்குள்ள மலைகளில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு, மண் சரிவால், நீரின் ஊற்றுக்கண்கள் அடைபட்டு, சமவெளி பகுதிக்கான நீர்வரத்து குறைந்து போகும்; இந்த அபாயத்தை யாரும் உணர்வதில்லை. எனவே, நீலகிரி மலையும், அதில் உள்ள மரம், செடி, கொடி, விலங்கினங்கள் காப்பாற்றப்பட வேண்டும்; ஏற்கனவே, பல்வேறு கட்டுமானங்களால் 'சுருங்கி'யுள்ள மலையை, இனியும் 'சுருக்காமல்' பாதுகாக்க வேண்டும்.நாட்டில், 1,200 கி.மீ., நீளத்துக்கு பரந்து விரிந்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் தான், கனிம வளங்கள் எடுக்கப்படுகின்றன. ஒரு சவரன், அதாவது, 8 கிராம் தங்கம் உருவாக, 3,000 கிலோ, அதாவது, 3 டன் மண் சலிக்கப்பட்டு, அந்த மண் கழிவாக மாற்றப்படுகிறது. இவ்வாறு, பல லட்சம் டன் மண் கழிவாகும் போது, அதில் உள்ள பல்லுயிர்கள் மடிகின்றன.
---
மேற்குத் தொடர்ச்சி மலை
கோவை சதாசிவம்
பிரவீன்குமார்

