/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடப்பாண்டில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி; உடுமலையில் நடத்த வலியுறுத்தல்
/
நடப்பாண்டில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி; உடுமலையில் நடத்த வலியுறுத்தல்
நடப்பாண்டில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி; உடுமலையில் நடத்த வலியுறுத்தல்
நடப்பாண்டில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி; உடுமலையில் நடத்த வலியுறுத்தல்
ADDED : மே 14, 2025 11:34 PM
உடுமலை; நடப்பாண்டில், பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கான கல்லுாரி கனவு நிகழ்ச்சி, உடுமலையில் இல்லாததால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
மாநில அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், தற்போது பிளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, 'கல்லுாரி கனவு' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கல்லுாரிகளிலிருந்து பேராசிரியர்கள், கருத்தாளர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் பங்கேற்கின்றனர்.
கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், அதற்கான வேலைவாய்ப்புகள், எந்த மாணவர்கள் எந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பது, எவ்வாறு தேர்வு செய்வது, மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகை, கலந்தாய்வில் விண்ணப்பிப்பது, அரசின் திட்டங்கள், உயர்கல்விக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கின்றனர்.
கடந்தாண்டு, திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், திருப்பூர், உடுமலையில் நடந்தது.பல்வேறு கல்லுாரிகளைச்சேர்ந்த கருத்தாளர்கள், ஐ.டி.ஐ., பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் பங்கேற்று மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதி மாணவர்களுக்கு உடுமலையில் நடந்தது. இதனால் சுற்றுப்பகுதி மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க பயனுள்ளதாக இருந்தது.
ஆனால் நடப்பாண்டில் இந்நிகழ்ச்சி, திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதியில் மட்டுமே நடத்தப்படுகிறது. மே இறுதியில் இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதி மாணவர்கள், தாராபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அறிவித்துள்ளது.
மாணவர்களை அழைத்துச்செல்வதற்கும் எந்தவிதமான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான செலவினங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும், பெற்றோரும் உடுமலையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படாததால், அதிருப்தியில் உள்ளனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
மாணவர்கள் சென்று வருவதற்கு வசதியாக இல்லாமல், இவ்வாறு தொலைதுாரம் நடத்துவதால், பலருக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்படும். மாணவர்கள் பயன்பெறுவதற்கு நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, முழுமையாக அவர்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும்.
கடந்தாண்டை போல் நடப்பாண்டிலும், உடுமலையிலும் ஒரு மையம் அமைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினர்.