ADDED : ஜன 12, 2025 02:15 AM

கோழிக்கொண்டை உள்ளிட்ட பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களில், செயற்கை சாயமேற்றும் செயல் அதிகரித்து வருவது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்களின் தினசரி பயன்பாடு மற்றும் பூஜைகளுக்கு பூக்களை பயன்படுத்துவது, வழக்கமாக இருக்கிறது. சாதாரண நாட்கள் மட்டுமின்றி, வெள்ளிக் கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள், அதிகளவில் பூக்களை வாங்குகின்றனர். பலர், மொத்த விற்பனை கடைகளில் இருந்தும், சிலர் சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்தும் பூக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்; பூஜைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
சில ஆண்டுகளாக, பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது. மல்லி, முல்லை மட்டுமின்றி, காக்கடா, கோழிக் கொண்டை பூ என பலதரப்பட்ட பூக்களை மக்கள் வாங்குகின்றனர். இதில், கோழிக்கொண்டை உள்ளிட்ட சில பூக்களில் செயற்கையாக நிறமேற்ற, தடை செய்யப்பட்ட செயற்கை நிறமிகளை வியாபாரிகள் பலர் பயன்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.
திருப்பூர், ராயபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ''பூஜைக்காக கோழிக்கொண்டை பூ வாங்கி, இரவில் தண்ணீரில் வைத்து, காலையில், சாமி படங்கள், வீட்டு முற்றங்களில் சூடலாம் என வைத்திருந்தேன். காலையில் எழுந்து பூ வைக்கப்பட்ட தண்ணீரை பார்க்கும் போது, பீட்ரூட் நிறத்தில் இருந்தது. செயற்கை நிறமி சேர்க்கப்பட்டிருப்பது, வெளிப்படையாகவே தெரிந்தது.
பூஜை காரியங்களுக்கு பூக்களை பயன்படுத்துவது, மக்கள் மத்தியில் ஆன்மிக ரீதியாக ஒரு நம்பிக்கையை விதைக்கிறது. அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையிலான இத்தகைய செயல், வருத்தமளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

