/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி பாசன பகுதிகளில் நெல் அறுவடை துவக்கம்; அரசு கொள்முதல் மையங்கள் திறக்க வலியுறுத்தல்
/
அமராவதி பாசன பகுதிகளில் நெல் அறுவடை துவக்கம்; அரசு கொள்முதல் மையங்கள் திறக்க வலியுறுத்தல்
அமராவதி பாசன பகுதிகளில் நெல் அறுவடை துவக்கம்; அரசு கொள்முதல் மையங்கள் திறக்க வலியுறுத்தல்
அமராவதி பாசன பகுதிகளில் நெல் அறுவடை துவக்கம்; அரசு கொள்முதல் மையங்கள் திறக்க வலியுறுத்தல்
ADDED : மார் 01, 2024 12:29 AM

- நமது நிருபர் -
அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விலை சரிவால் விவசாயிகள் பாதித்து வருவதை தடுக்க, உடனடியாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: அமராவதி பழைய மற்றும் புதிய அமராவதி பாசன பகுதிகளில், வறட்சி மற்றும் அணையிலிருந்து நீர் திறப்பு தாமதம் காரணமாக, 50 சதவீதம் மட்டுமே நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் நடவு செய்த 20 சதவீத விவசாயிகள் அறுவடையை துவக்கி விட்டனர். இன்னும் 30 சதவீத விவசாயிகளுக்கு, முழு மகசூல் பெற இன்னும் மூன்று சுற்று தண்ணீர் தேவைப்படுகிறது.
அணையிலிருந்து, தற்போது ஏழு நாட்களுக்கு ஒருமுறை நீர்திறப்பு என்ற அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.
மார்ச் மாதம் வரை மட்டுமே நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நெற்பயிர்களை காப்பாற்றும் வகையில், ஏப்., 15 வரை தண்ணீர் வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்றுவருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
எனவே, நுகர் பொருள் வாணிப கழகம் வாயிலாக, அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் உடனடியாக அரசு நெல் கொள்முதல் மையங்களை துவக்கவும், கட்டுப்பாடு இல்லாமல், அனைத்து விவசாயிகளிடமிருந்தும் அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும், உடுமலை, தாராபுரம், பகுதிகளில், விவசாயிகள் நெல் விதைப்பண்ணைகள் அமைத்துள்ளனர்.
சுற்றுப்பகுதியிலுள்ள, 50க்கும் மேற்பட்ட தனியார் விதை நெல் உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து மிக குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் தனியார் நிறுவனங்களை அழைத்துப்பேசி, விதை நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பொய்த்துவிட்டன. இதனால், கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.
அடுத்த ஒரு மாதத்தில் குடிநீர் பற்றாக்குறை, கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
நீர் பற்றாக்குறை காரணமாக, தென்னை, கரும்பு, நெல், காய்கறி பயிர்கள் என அனைத்து, வேளாண், தோட்டக்கலை பயிர்கள் காய்ந்து வருகின்றன.
எனவே, திருப்பூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, அரசிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலையைச் சேர்ந்தவர் நல்லப்பன். விவசாயி. இவர், உடுமலை ஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் நிதி முறைகேடு நடைபெறுவதாகவும்; தேசிய வேலை உறுதி திட்டத்தில் எடுக்கப்பட்ட பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டிவருகிறார்.
இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட ஆவணங்களை தலையில் சுமந்தபடிவந்து, கடந்த 2023, அக்டேபார் 27 ம் தேதி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.
நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், அதே கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயி நல்லப்பன், சட்டை அணியாமல் வந்து, டி.ஆர்.ஓ., ஜெய்பீமிடம் மனு அளித்தார்.
அதிகாரிகள் சட்டை அணிய அறிவுறுத்தியபோதும், 'தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும், என் நியாயமான கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், காந்தியை போல் சட்டை அணியாமல், அறவழியில் போராடுகிறேன்' என்றார்.
கூட்ட அரங்கின் முன்வரிசையில், சட்டை அணியாமல் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

