/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் அடிப்படையில் வணிக சிலிண்டர்; தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
/
ரேஷன் அடிப்படையில் வணிக சிலிண்டர்; தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
ரேஷன் அடிப்படையில் வணிக சிலிண்டர்; தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
ரேஷன் அடிப்படையில் வணிக சிலிண்டர்; தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 16, 2026 07:23 AM

திருப்பூர்; ''பிரின்டிங் நிறுவனங்கள் உள்ளிட்ட பின்னலாடை துறையின் சில பிரிவினருக்கு ரேஷன் அடிப்படையில், வணிக சிலிண்டர் வழங்க வேண்டும்'' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர் சூழலால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. காஸ் போதிய இருப்பு இருந்தாலும், வணிக சிலிண்டர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பால், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், கடைகளில் காஸ் பயன்பாடு கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்கள், விறகு அடுப்பு பயன்படுத்த துவங்கிவிட்டன. இதேபோல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பயன்பாட்டிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிராமப்புற மக்கள், 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே முன்பதிவு செய்து சிலிண்டர் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, திருப்பூர் பின்னலாடை தொழிலில், சில பிரிவினர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிட்பிரின்டிங், காம்பாக்டிங், சாய ஆலைகளில், துணியை பதப்படுத்தும் பணிக்காக, காஸ் பயன்பாடு அத்தியாவசியமாக உள்ளது. பிரின்டிங் நிறுவனங்களில், பிரின்ட் செய்யப்பட்ட துணியை காயவைக்க, 'ஹீட் செட்டிங்' பயன்பாட்டுக்கு காஸ் பயன்படுத்தப்படுகிறது.
'மேனுவல்' பிரின்டிங் மெஷின்களிலும், காஸ் பயன்பாடு அவசியம். இந்நிலையில், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பின்னலாடை உற்பத்தியில் முக்கிய பிரிவுகளில், உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திடீர் தட்டுப்பாடு காரணமாக, கூடுதல் விலை கொடுத்தாவது, சிலிண்டர்கள் வாங்கி இருப்பு வைக்க தயாராகிவிட்டனர். சில ஏஜன்சிகளும், கூடுதல் விலைக்கு விற்க துவங்கிவிட்டதாக, தொழில்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். தொழில் பாதிப்பு ஏற்படாத வகையில், 'ரேஷன்' முறையில், வணிக சிலிண்டர் வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

