/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரக்கன்று பட்டுப்போகாமல் காக்க உறுதி
/
மரக்கன்று பட்டுப்போகாமல் காக்க உறுதி
ADDED : டிச 28, 2025 07:10 AM

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவிநாசி - அன்னுார் சாலையில் நடப்படும் மரக்கன்றுகளில் சில பட்டுப்போயிருக்கிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதற்காக ரோட்டோரம் வளர்ந்து, நிழல் பரப்பிக் கொண்டிருந்த நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன.'வெட்டப்படும் ஒரு மரத்துக்கு இணையாக, 10 மரக்கன்று நட வேண்டும்' என்ற விதிக்கு உட்பட்டு, மரக்கன்று நடும் பணியிலும் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையின் இருபுறம் மட்டுமின்றி, சாலையின் மையத்தடுப்பிலும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் சில மரக்கன்றுகள், பட்டு போயிருப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 'சரியான ஆழத்தில், முறையான பராமரிப்புடன் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்' எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரத்தினசாமி கூறியதாவது:
திருப்பூர் கோட்டத்தின் சார்பில் மட்டும், 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 9,000 மரக்கன்றுகள் நடப்பட்டுவிட்டன. எஞ்சிய, மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
வேப்பம், புங்கை, மருது உள்ளிட்ட நாட்டு மரங்கள் தான் நடவு செய்யப்படுகின்றன. இதில், 8 முதல், 10 அடி வரை வளர்ந்த மரக்கன்றுகளை நடும் போது, அவற்றை நர்சரியில் இருந்து எடுத்து வரும் போது வேர் துண்டிக்கப்பட்டு, வளராமல் போய்விடுகிறது.
அத்தகைய பட்டுப்போன மரக்கன்றுகள், மாற்றப்பட்டு, புதிதாக மரக்கன்று நடவு செய்யப்படும். வேப்ப மரங்களை பொறுத்தவரை பனிக்காலம் எனபதால், இலைகள் வாடியுள்ளது; தை மாதம் பிறந்ததும், அவை தழைத்து வளர துவங்கிவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

