/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய அறிவியல் தின விழா; மாணவர்களுக்கு போட்டி
/
தேசிய அறிவியல் தின விழா; மாணவர்களுக்கு போட்டி
ADDED : பிப் 18, 2025 10:05 PM
உடுமலை; தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா வரும் 22,23ம் தேதிகளில் நடக்கிறது.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், மாவட்ட பள்ளிக்கல்வி துறை, தேஜஸ் ரோட்டரி சங்கம், எம்.ஜி. சஞ்சீவ்ராஜ் நினைவு அறக்கட்டளையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது.
திருவிழா அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 வகுப்புகள் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது.
வரும் 22ம் தேதி அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமைப்படைப்புகள் கண்காட்சி, எளிய அறிவியல் சோதனைகளை செய்வது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கண்காட்சி நடக்கிறது.
சிறந்த படைப்புகளுக்கு தொலைநோக்கி, பைனாகுலர், ரோபோடிக்ஸ் தொகுப்பு, மடிப்பு நுண்ணோக்கி உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பொருட்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து அறிவியல் வினாடி - வினா, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
வெற்றி பெறும் மாணவர்கள், களப்பயணமாக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். தவிர, பங்கேற்கும் அனைத்து மாணவர்களும், கோளரங்க காட்சியை பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்பதற்கு பிப்., 21ம் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். தொலைபேசி எண்கள் 73059 67764, 87782 01926, 88835 35380 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என, கலிலியோ அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.