/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகள வீரர்களை அடையாளம் காண போட்டி
/
தடகள வீரர்களை அடையாளம் காண போட்டி
ADDED : ஜன 29, 2025 03:46 AM
திருப்பூர்; தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், திருப்பூர் மாவட்ட தடகள சங்க தலைவருமான சண்முகசுந்தரம் அறிக்கை:
திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில், சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில, தேசிய, தென்னிந்திய மற்றும் பல்கலை அளவிலான போட்டியில் பங்கேற்க செய்து, ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் பெற, ஆவண செய்து வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தை ஆறு பயிற்சி மண்டலங்களாக பிரித்து, பயிற்சி மையங்களை ஏற்படுத்தி, தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் வாயிலாக, பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில், கிராமப்புற மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, தங்களின் திறமையை வளர்த்து வருகின்றனர்.
ஆண்டுதோறும், மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை நடத்துவதுடன், பந்து எறிதல், தாண்டுதல், விரைவு ஓட்டம் மற்றும் தொலைதுார போட்டிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறோம். தற்போது மாவட்ட அளவிலான விரைவு ஓட்டம் மற்றும் தாண்டுதல் போட்டிகள், வரும், 9ம் தேதி உடுமலைப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில், 6,8,10, 12, 15, 16, 18, 20 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மூத்தோர் பிரிவில் மாணவ, மாணவியர் என, இரு பாலரும் பங்கேற்கலாம். இவர்களுக்கு, 20 மீ., 30, 50, 60, 100 மற்றும், 200 மீ ஓட்டப் போட்டிகளும், பந்து எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 3 மற்றும் 5 முறை தொடர்ச்சியாக தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில், பங்கேற்க www.tirupuratheleticassociation.com என்ற இணையதளத்தில் சுய விவரங்களை பதிவு செய்யலாம். வரும், 6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேற்கொண்டு விவரங்களுக்கு, 86677 - 99305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.