/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் மீது புகார்; ஸ்டேஷன் முற்றுகை
/
பெண் மீது புகார்; ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஆக 21, 2025 09:44 PM
பல்லடம்; பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் பெண் ஒருவர், அடாவடி செய்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
நாங்கள், பனியன் கம்பெனிக்கும், கூலி தொழிலுக்கும் சென்று வருவாய் ஈட்டி வருகிறோம். இங்குள்ள குடியிருப்பு ஒன்றில், தனியாக வசித்து வரும் பெண் ஒருவர், அனைவரிடமும் அடாவடி செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஆண்களிடம் அத்து மீறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
மது அருந்திவிட்டு வந்து, வேண்டுமென்றே வம்பிழுப்பதும், எதிர்த்து கேள்வி எழுப்பினால், தகாத வார்த்தைகளால் கூச்சலிடுவதுமாக அநாகரிகமாக செயல்படுகிறார். இவரால், எங்களது நிம்மதி பறிபோகிறது. நேற்று முன்தினம், தொழிலாளி ஒருவரிடம் வம்பிழுத்த இப்பெண், அவரை, செருப்பால் அடித்ததுடன், மொபைல் போனையும் உடைத்தெறிந்தார்.
அடாவடி செய்து வரும் பெண் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக, வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அப்பெண்ணை இங்கிருந்து காலி செய்யுமாறு வலியுறுத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் மாதையன், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.