ADDED : பிப் 15, 2024 12:02 AM

பல்லடம்: பல்லடம் சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் இம்மானுவேல், பல்லடம்டி.எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனு:
இரண்டு நாள் முன், எனது நண்பர் சிவா என்பவரின் கார் உதிரிபாகங்களை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். விசாரித்த போது, இதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருடி சென்றது தெரிந்தது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, காருக்குள் வைத்திருந்த உதிரிபாகத்தை வெளியே துாக்கி எறிந்ததுடன், டிவி நிருபரை வெட்டியது போல், வெட்டி கொன்று விடுவேன். உயிரோடு நீ நடமாட முடியாது என கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தேன். அங்கு வந்த போலீசார், அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்து கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர். இருப்பினும், போலீசார் முன்னிலையில், தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அன்று மாலையே அவரை விடுவித்தனர். ஸ்டேஷனில் இருந்து திரும்பி வந்த அவர் கொலை மிரட்டல்விடுத்ததுடன், ஆட்களை வைத்து என்னை தேடி வருகிறார்.
கார் உதிரி பாகத்தை திருடியதாக புகார் அளித்தும், கஞ்சா வைத்திருந்ததை போலீசாரே நேரடியாக பறிமுதல் செய்த பின்னரும், போலீசார் அவரை விடுவித்துள்ளனர். சமூக விரோதிகளால் எனது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இதற்கு, பல்லடம் போலீசாரே முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் கேட்டதற்கு, ''சம்பந்தப்பட்ட நபர் கஞ்சா வைத்திருந்ததாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும், இது குறித்து விசாரித்துநடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

