/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பார்த்தீனியம் செடி பரவல் அதிகரிப்பு பாதிப்புகளால் கவலை
/
பார்த்தீனியம் செடி பரவல் அதிகரிப்பு பாதிப்புகளால் கவலை
பார்த்தீனியம் செடி பரவல் அதிகரிப்பு பாதிப்புகளால் கவலை
பார்த்தீனியம் செடி பரவல் அதிகரிப்பு பாதிப்புகளால் கவலை
ADDED : அக் 10, 2025 10:34 PM
உடுமலை; விவசாய சாகுபடி மற்றும் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், பார்த்தீனிய செடிகளின் பரவல் உடுமலை பகுதியில், அதிகளவு உள்ளது;வேளாண்துறை வாயிலாக ஒருங்கிணைந்த முறையில், செடிகளை அழிக்க, தேவையான நடவடிக்கை துவக்க வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், ஆயிரம் ெஹக்டேரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சாகுபடியில், அதிக செலவு மற்றும் விரயத்தை பார்த்தீனிய செடிகள்ஏற்படுத்துகின்றன.
சாகுபடிக்கு இடைவெளி விடப்படும் விளைநிலங்கள், ரோட்டோரங்கள், குளங்கள், ஓடைகள், தரிசு நிலங்கள் என அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனிய செடிகளால், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
விஷ செடியான பார்த்தீனியம், மனிதர்களுக்கு, அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகிறது.
கால்நடைகளுக்கு, காய்ச்சல், அரிப்பு மற்றும் நச்சுத்தன்மையால், மறு உற்பத்தி திறன் ஆகியவற்றை பாதிக்கிறது.
விளைநிலங்களில், சாகுபடிக்கு முன், இச்செடிகளை அகற்றவே, பல ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். செடிகளை கட்டுப்படுத்த, அதிக வீரியம் மிகுந்த களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால், மண் வளமும் பாதிப்பிற்குள்ளாகிறது.
செடிகளை அகற்ற, சில ஆண்டுகளுக்கு முன், உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக அரசு நடவடிக்கை எடுத்தது. ரோட்டோரங்களில், இருந்த பார்த்தீனிய செடிகளை ஆட்களை கொண்டு அகற்றி, அங்கு, களைக்கொல்லி தெளிக்கப்பட்டது. பின்னர், இத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பருவமழை துவங்கியதும், செடிகளின் வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் அதிகளவு உள்ளது.
எனவே, அரசு, பார்த்தீனிய செடிகளை அகற்ற, உள்ளாட்சி, தன்னார்வ அமைப்புகள், வேளாண்துறை, தோட்டக்கலைத் துறையை ஒருங்கிணைத்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.