/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர கடைகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி
/
சாலையோர கடைகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி
ADDED : பிப் 23, 2024 12:56 AM

திருப்பூர்;உழவர் சந்தை நேரத்தில் சாலையோர கடைகள் இயங்குவது தொடர்பான பிரச்னைக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
திருப்பூர் - பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பகுதியில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தை செயல்படுகிறது. சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டுவந்து, நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
உழவர் சந்தை நடைபெறும் நேரத்தில், சந்தையை ஒட்டி பல்லடம் ரோட்டின் இருபுறமும் வியாபாரிகள், வாகனங்களில் வைத்தும், தள்ளுவண்டி கடைகளிலும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்துவந்தனர். இதனால், சந்தைக்குள் கடை அமைத்துள்ள விவசாயிகளுக்கு வர்த்தகம் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகளை ஒருங்கிணைத்து, சந்தை புறக்கணிப்பு உள்பட தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நேற்று அதிகாலை, உழவர் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர கடைகளை, அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து, திருப்பூர் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப்கலெக்டர் சவுமியா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போலீசார், உழவர் சந்தை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பாலன், தலைவர் முருகேஷ், மோட்டார் சங்க செயலாளர் அன்பு உள்ளிட்டோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலன் கூறியதாவது:
உழவர் சந்தை நேரத்தில் சாலையோர வியாபாரிகள் கடை அமைப்பது தொடர்பாக, திருப்பூர் சப்கலெக்டர் தலைமையில், ஏற்கனவே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திமுடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அதிகாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. திருப்பூர் - பல்லடம் ரோட்டில், டி.கே.டி., பங்க் பஸ் ஸ்டாப்பிலிருந்து பழக்கடைகள் அமைத்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு நாங்கள் உடன்பாடு தெரிவித்துள்ளோம், என்றார்.