/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணைப்பு சக்கர ஸ்கூட்டர்; பயனாளி தேர்வு குளறுபடி
/
இணைப்பு சக்கர ஸ்கூட்டர்; பயனாளி தேர்வு குளறுபடி
ADDED : ஏப் 09, 2025 11:23 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கு பயனாளிகள் தேர்வு செய்வதில் குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
கால் பாதித்து, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசு, இலவச இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்குகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், இலவச ஸ்கூட்டருக்கு பயனாளிகள் தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. விதிகளை மீறி, அரசு துறை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.
கடந்த 2024ல், தாராபுரத்தை சேர்ந்த ரேஷன் பணியாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட இலவச ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளின் எதிர்ப்புக்குப்பின் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் தெற்கு தாலுகாவை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023ல் ஸ்கூட்டர் பெற்ற பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த ஒருவர், மீண்டும் பயனாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமாரிடம் கேட்டபோது, 'சத்துணவு ஊழியர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாக தவறான தகவல் அளித்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளி, மீண்டும் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளாரா என பட்டியல் ஆய்வு செய்யப்படும். தவறுகள் இருப்பின் சரி செய்யப்படும்' என்றார்.