/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலை திறம்பட நடத்த செயல்திட்டம் நாளை அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
/
தேர்தலை திறம்பட நடத்த செயல்திட்டம் நாளை அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
தேர்தலை திறம்பட நடத்த செயல்திட்டம் நாளை அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
தேர்தலை திறம்பட நடத்த செயல்திட்டம் நாளை அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
ADDED : மார் 18, 2025 09:51 PM
-- நமது நிருபர் -
தேர்தலை திறம்பட நடத்துவது தொடர்பான செயல்திட்டங்கள் தொடர்பாக கருத்துகளைப் பெறுவதற்காக, திருப்பூரில் கலெக்டர் தலைமையில், நாளை (20ம் தேதி) அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
தேர்தல் கமிஷன், ஒவ்வொரு தேர்தலையும் திறம்பட நடத்துவதற்காக, சிறந்த செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்திவருகிறது.
தற்போது, மாநில, மாவட்ட அளவில், அனைத்து அரசியல் கட்சியினருடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி, தேர்தல் தொடர்பான கருத்துக்களை பெற தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அவ்விபரங்களை வரும் ஏப்., 30ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், நாளை (20ம் தேதி), காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்பட மாவட்ட தேர்தல் பிரிவு சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம், குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.
சிறந்த ஆலோசனைக்கு செயல்வடிவம்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்று, தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதில் தேவைப்படும் மாற்றங்கள், தேர்தல் நடத்தை விதிமுறை, பாதுகாப்பு, ஓட்டுப்பதிவு தொடர்பாக வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என, தேர்தல் தொடர்பான எத்தகைய ஆலோசனைகளையும் கூறலாம்.
அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும். சிறந்த ஆலோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதன் வாயிலாக, வரும் காலங்களில் தேர்தலை மேலும் திறம்பட நடத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.